பல கனவுகளுடன் காரில் வந்த 5 இளைஞர்கள்... கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி! கதறிய குடும்பம்
கண்ணிமைக்கும் நேரத்தில், கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து இரும்பு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், பொறியியல் பிரிவில் மெக்கானிக்கல் படித்த மேட்டூரை சேர்ந்தவர் நவீன், ராஜ ஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோருக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை சென்னையில் இண்டர்வியூ நடைபெற இருந்தது.
இதற்காக, சென்னையில் வசிக்கும் அரவிந்தை தவிர மற்ற 4 பேரும் சென்னைக்கு வந்து காரப்பாக்கத்தில் தங்கியிருந்தனர். இதையடுத்து, இவர்கள் கடந்த நாள் இரவு திநகர் சென்றுவிட்டு ஹாரிஸின் சொகுசு காரில் வண்டலூர் வரை சென்றுள்ளனர்.
காரை நவீன் ஓட்டியுள்ளார். அவர்கள் சென்ற கார் பெருங்களத்தூர் அருகே வந்தபோது அங்கு இரும்பு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியுள்ளது,. இதனால், அங்கு நடந்த கோர விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,
இதன்பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல கனவுகளுடன் சென்னைக்கு வந்த இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.