மகிழ்ச்சியாக சுற்றுலா சென்ற குடும்பம்... பெற்றோர் கண்முன்னே 4 சிறுவர் உயிரிழந்த சோகம்
சுற்றுலா சென்ற இடத்தில் 4 சிறுவர்கள் தண்ணீரில் எதிர்பாராத விதமாக அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் வல்லூர் பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் கான் என்பவரின் குடும்பத்தினர் 12 பேர் காரில் சுற்றுலாவிற்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்குள்ள பென்னா நதிக்கு அருகே உள்ள புஷ்பகிரி கோவிலுக்கு சென்று, அங்குள்ள மணல் திட்டுகளில் அனைவரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதில் இருந்த சிறுவர்கள் மட்டும் ஆற்றில் இறங்கி குளிக்க சென்றுள்ளனர். அந்நேரத்தில் பாத்தான் அப்துல், அப்துல் ரசித், அனுஷ்கான், வாகித்கான் ஆகிய 4 சிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நீரின் ஆழத்திற்குள் சென்று அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களை மீட்க சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் யாரும் கிடைக்கவில்லை. உடனே பொலிசாருக்கும், உள்ளூரை சேர்ந்த நீச்சல் வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், 4 சிறுவர்களில் 3 பேரின் உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது.
ஆற்றில் மாயமான வாகித்கான் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெற்றோர் கண்முன்னே குழந்தைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் கடப்பாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.