கமல் கட்சியிலிருந்து மீண்டும் 2200 பேர் விலகியதால் பரபரப்பு... வெளியான உண்மையால் அதிர்ச்சி
நடிகர் கமல் புதிதாக இயக்கிய கட்சியான மக்கள் நீதி மய்யத்திலிருந்து 2200 பேர் விலகியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியினை சந்தித்தனர்.
தேர்தல் தோல்விக்கு பின்பு, குறித்த கட்சியிலிருந்து மகேந்திரன் வெளியேறியது மட்டுமின்றி கமல்மீது பரபரப்பு குற்றச்சாட்டையும் வைத்தார்.
இதற்கு கமல் மகேந்திரனை துரோகி என விமர்சித்தது யாவரும் அறிந்ததே. இதன் பின்பு ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா ஆகியோர் சொந்த காரணங்களால் விலகுவதாக கூறினர்.
கமல் கட்சியிலிருந்து இவ்வாறு அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது பொதுச்செயலாளர் முருகானந்தம் விலகியுள்ளதோடு, பல பகீர் காரணங்களையும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகி இருப்பதாகவும், கமல்ஹாசன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் ஜனநாயக முறையில் கட்சி செயல்படாததால் பதவி விலகுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
முருகானந்தம் மட்டுமின்றி கட்சியின் மாநில செயலாளர் வீரசக்தி, மாநில துணை செயலாளர் அய்யனார், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் உள்பட 15 பேரும் தங்களுடைய அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த அறிக்கையில், தங்களுடன் சேர்ந்து திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 414 வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்ட கிளை செயலாளர்கள் சுமார் 200 பேர், 2000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,200 பேரும் உறுப்பினர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி, தற்போது நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.