ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் அது இலவசம்: அலைமோதும் மக்கள்
ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிற்றர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இறைச்சிக் கடை ஒன்றில் ஆடி மாத சலுகை விற்பனைக்கு மிகவும் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இங்கு ஆடு, நாட்டு கோழி, வாத்து, முயல்,வான்கோழி, காடை, கருப்புக் கோழி, கின்னிக் கோழி என பல ரகங்களில் இறைச்சிகள் கிடைக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடை தொடங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம், 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வந்துள்ளார்.
தற்போது ஒரு படி மேலே சென்று, ஒரு கிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிற்றர் பெட்ரோல் இலவசம் என அதிரடியாக அறிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளது மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இறைச்சி வாங்க வெகுதூரத்திலிருந்து இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கறியுடன் பெட்ரோலை இலவசமாக வாங்கி செல்கிறார்கள்.
இது குறித்து சந்திரன் கூறுகையில், "எனது தந்தை காலத்தில் திருமங்கலத்தில் எங்கள் குடும்பம் மட்டும் தான் வான்கோழி வளர்த்து விற்பனை செய்து வந்தார்கள்.
தற்போது மக்களுக்கு நல்ல சத்தான இறைச்சிகளை வழங்க வேண்டும் என்பதற்காக உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இறைச்சிகளை விற்பனை செய்கிறோம்" என தெரிவித்துள்ளார்.