Iqbal Sheikh: 5 ஆண்டுகளாக குளத்திலேயே வாழ்க்கை! 16 வயது சிறுவனின் கண்ணீர் கதை
Iqbal Sheikh story : நம்மைச் சுற்றி பலவிதமான மனிதர்களை நாம் பார்க்கிறோம். சிலருக்கு வித்தியாசமான பழக்கங்கள் இருக்கலாம்; சிலருக்கு மற்றவர்களிலிருந்து மாறுபட்ட உடல் அமைப்பு இருக்கலாம். ஆனால், மருத்துவ அறிவியலுக்கே சவால் விடும் அளவுக்கு அரிய உடல்நலப் பிரச்சனையுடன் வாழும் மனிதர்களின் கதைகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
அப்படிப்பட்ட ஒரு வேதனையான வாழ்க்கையைத்தான் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டங்காவைச் சேர்ந்த 16 வயது இக்பால் ஷேக் வாழ்ந்து வருகிறார்.

தண்ணீருக்குள் இருந்தால் மட்டுமே நிம்மதி
பிற குழந்தைகளைப் போல நண்பர்களுடன் விளையாட வேண்டும், பள்ளிக்குச் செல்ல வேண்டும், வீட்டில் குடும்பத்தினருடன் இயல்பாகச் சாப்பிட வேண்டும் என்பதுதான் இக்பாலின் வயதுக்கேற்ற வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. தண்ணீரை விட்டு வெளியே வந்தாலே உடல் முழுவதும் தீயில் எரிவது போன்ற கடுமையான வேதனை ஏற்படுவதாக இக்பால் கூறுகிறார். ஆனால் மீண்டும் தண்ணீருக்குள் சென்றவுடன் அந்த வலி ஓரளவு குறைந்து, உடல் குளிர்ச்சியடைகிறது.

இதனால், ஒரு மீனைப் போல தனது நாளின் பெரும்பகுதியை தண்ணீரிலேயே கழிக்க வேண்டிய நிலைக்கு இக்பால் தள்ளப்பட்டுள்ளார். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே தண்ணீரை விட்டு வெளியே வருவதாகக் கூறப்படுகிறது.
மற்ற நாட்களில் குளத்தில் நீந்தியும், மிதந்தும், சில நேரங்களில் தண்ணீருக்குள் மூழ்கியபடியும் அவர் நேரத்தைச் செலவிடுகிறார். அதிர்ச்சியளிக்கும் வகையில், இரவு முழுவதும் கூட தண்ணீரில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

உணவு சாப்பிடுவதற்குக்கூட தண்ணீரை விட்டு வெளியே வர முடியாத நிலை இருப்பதால், குடும்பத்தினரும் உள்ளூர் மக்களும் அவருக்கு உணவு, சிற்றுண்டி மற்றும் பழங்களை தண்ணீரிலேயே கொண்டு சென்று வழங்குகின்றனர்.
என்ன காரணம்?
மகனை இப்படியொரு நிலையில் பார்த்த பெற்றோர் முதலில் கவலையடைந்து, அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ நிபுணர்களின் ஆரம்பக் கருத்துப்படி, இது அரிய வகையான தோல் அல்லது நரம்பியல் தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், இக்பாலின் நிலைக்கான துல்லியமான காரணத்தையும் உரிய சிகிச்சையையும் கண்டறிய மேலும் மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படுவதாகத் தெரிகிறது. இதற்கிடையே, நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதால் இக்பாலுக்கு அவ்வப்போது கடுமையான சளி, இருமல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

ஏற்கெனவே கடுமையான உடல் வேதனையுடன் போராடி வரும் சிறுவனுக்கு, இந்தப் பிரச்சனைகளும் கூடுதல் சுமையாக மாறியுள்ளன.சிறந்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அதிக செலவு ஆகும் நிலையில், பொருளாதார வசதி குறைந்துள்ள இக்பாலின் குடும்பம் உதவிக்காக காத்திருக்கிறது.
சிறுவனின் நிலையை அறிந்த கிராம மக்களும் உறவினர்களும் அவருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவ முன்வந்துள்ளனர்.அவரது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க நன்கொடைகள் திரட்டும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பிற குழந்தைகள் விளையாடும் வயதில், தண்ணீருக்குள் மட்டுமே நிம்மதியைத் தேடி வாழ வேண்டிய நிலை இக்பாலுக்கு.அவரது வேதனைக்கு முறையான மருத்துவக் காரணம் கண்டறியப்பட்டு, விரைவில் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |