100 வயதில் மீண்டும் திருமணம்; புஷ்பவனத்தில் நெகிழ்ச்சியான நிகழ்வு!
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்த 100 வயதான கிருஷ்ணசாமியின் நூற்றாண்டு விழாவை அவரது குடும்பத்தினர் உற்சாகமாகக் கொண்டாடியுள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
100 வயதில் மீண்டும் திருமணம்
விழாவின் சிறப்பம்சமாக, அவரது 85 வயது இரண்டாவது மனைவி செல்லம்மாளுடன் மீண்டும் திருமண வைபவம் நடத்தப்பட்டது. புஷ்பவனம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற இந்த விழாவில், கிருஷ்ணசாமியும் செல்லம்மாளும் மணமக்கள் அலங்காரத்தில் அமர வைக்கப்பட்டனர்.

பின்னர் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில், செல்லம்மாளின் கழுத்தில் கிருஷ்ணசாமி மீண்டும் தாலி கட்டினார்.
கிருஷ்ணசாமி தனது வாழ்நாளில் 97 வயது வரை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது முதல் மனைவி சவுந்தரி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தற்போது 85 வயதான செல்லம்மாளுடன் வசித்து வருகிறார்.
நூற்றாண்டு விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, கிருஷ்ணசாமி–செல்லம்மாள் தம்பதியினரிடம் ஆசி பெற்றனர்.
மலேசியா, சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் அவர்களது ஐந்து பேரன்களும் தாத்தாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்து விழாவில் கலந்து கொண்டனர்.
100 வயதிலும் கிருஷ்ணசாமி தனது அன்றாட பணிகளைத் தானே செய்து கொண்டு சுறுசுறுப்பாக வாழ்ந்து வருகிறார். அவருக்கும் செல்லம்மாளுக்கும் 3 மகன்கள், 4 மகள்கள், 13 பேரன்–பேத்திகள் மற்றும் ஒரு கொள்ளுப்பேத்தி உள்ளனர்.
கிருஷ்ணசாமியின் நூற்றாண்டு விழாவும், செல்லம்மாளுடன் மீண்டும் நடைபெற்ற திருமண வைபவமும் புஷ்பவனம் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.