யூடியூப் பிரபலம் கோபி- சுதாகர் மீது பண மோசடி குற்றச்சாட்டு- வீடியோ மூலம் விளக்கம்!
யூ-டியூப் தளத்தில் பிரபலங்களாக இருப்பவர்கள் கோபி - சுதாகர். இவர்கள் நடத்தும் ‘பரிதாபங்கள்’ சேனலை 30 லட்சத்துக்கும் அதிகாமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவ்வப்போது இவர்கள் வெளியிடும் நகைச்சுவை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு.
இதையடுத்து, கஜா புயல் தாக்கியபோது FUNDMELON என்ற செயலி மூலம் 35 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர் கோபி சுதாகர் ஜோடி. அதைத் தொடர்ந்து கிரவுட் பண்ட் மூலம், திரைப்படம் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதை நம்பி 25 ஆயிரத்திற்கும் அதிமானோர் அளித்த தொகை மூலம் 6 கோடி ரூபாய்க்கும் மேலான நிதி கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே கிரவுட் பண்ட் மூலம் இவ்வளவு அதிக தொகை கிடைத்தது கோபி சுதாகர் ஜோடிக்குத்தான் என்கின்றனர். இதற்கு நன்றி தெரிவித்து இருவரும் ஒரு வீடியோவும் வெளியிட்டனர். இந்நிலையில்தான், யூடியூபர் ஜேசன் சாமுவேல் என்பவர், கோபி சுதாகர் மோசடி என்ற தலைப்பில் இரண்டரை மணிநேர வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், மோசடியான செயலி்களைப் பற்றி விளம்பரம் வெளியிட்ட கோபி சுதாகர் ஜோடி, அதன் வழியாக பணம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், SUPERBACKER என்ற செயலியில், 500 ரூபாய் செலுத்தினால், தினசரி ஒரு சதவீதம் லாபம் நமக்கு கிடைக்கும் என்ற விளம்பரம் பரிதாபங்கள் சேனலில் வெளியாகியிருந்ததை சுட்டிக் காட்டியுள்ளார். அதேபோல், FUNDMELON என்ற மோசடி செயலி மூலம் தான் கிரவுட் பண்டில் ஈடுபட்டனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கோபி சுதாகர் ஜோடி மூலம் மட்டுமே பிரபலமான FUNDMELON செயலியின் பின்னணியில் மோசடிக் கும்பல் இருப்பதாகவும் ஜேசன் சாமுவேல் புகார் எழுப்பியுள்ளார். அதனால் இந்த மோசடியில் இருவரும் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கோபி மற்றும் சுதாகர் இருவரும், இதுகுறித்து விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், சூப்பர் பேக்கர் செயலி குறித்து தாங்கள் விளம்பரம் மட்டுமே வெளியிட்டதாகவும் தங்களுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், தங்கள் மணி கம் டுமாரோ திரைப்படத்தின் தயாரிப்பு நடந்து கொண்டிருப்பதாகவும், கிரவுட் பண்ட் மூலம் நிதியளித்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அதுகுறித்த அப்டேட் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், கொரோனாவால் தங்கள் குழு கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விரைவில் டீசர் வெளியிடப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். வெளியான குற்றச்சாட்டுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், கிரவுட் பண்டில் நிதியளித்தவர்களுக்கு என்ன வகையான அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஜேசன் சாமுவேல் தனது வீடியோவில் காட்டியுள்ளார். பணம் வாங்கிவிட்டோம் என்பதற்காக ஏனோதானோவென்று ஒரு படத்தை கொடுத்து விடக் கூடாது என்று நினைக்கிறோம். ஏன் இவ்வளவு இடைவெளி என்பது படத்தின் டீஸர் வரும்போது உங்களுக்கு புரியும்.
கொரோனாவால் சினிமாவின் ஒரு பெரும்பகுதி இயங்கவே இல்லை.
இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். விரைவில் டீசர் வரும் என தெரிவித்துள்ளனர்.