முடி உதிர்வுக்கு சிகிச்சை எடுத்த இளைஞர்! மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்
கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து தனது தலைமுடி உதிர்ந்து வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடி உதிர்தல் பிரச்சினை
கேரளா மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் பல ஆண்டுகளாக முடி உதிரும் பிரச்சினையால் அவதிப்பட்ட நிலையில், தலையின் முன்பகுதி சற்று வலுக்கை விழவும் ஆரம்பித்துள்ளது.
இதனால் மற்றவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகிய பிரசாந்த் கடந்த 2014ம் ஆண்டு மருத்துவர் ஒருவரை அணுகி சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிரசாந்திற்கு முடி உதிர்தல் நிற்காமல், மேலும் பிரச்சினை அதிகமாகியுள்ளது. குறித்த மாத்திரையை எடுத்துக் கொண்ட பின்பு தலைமுடி மட்டுமின்றி புருவத்திலும் முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும் விரக்தியில் இருந்த பிரசாந்த் இறுதியில் விபரீத முடிவு எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.