சிவப்பு சேலை மூலம் பல உயிர்களை காப்பாற்றிய பெண்! உண்மை சம்பவம்
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை அறிந்த 65 வயது மூதாட்டி ஒருவர் தனது சிவப்பு சேலையை தண்டவாளத்தின் குறுக்கே கட்டி வைத்து அங்கே வரவிருந்த ரயிலை நிறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் இடா என்ற மாவட்டம் உள்ளது. இதன் தலைநகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கஸ்பா என்ற ரயில்நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் உள்ள அவாகர் என்ற கிராமத்தை சேர்ந்த ஓம்வதி என்ற 65 வயதாகும் மூதாட்டி, வேலை காரணமாக வயலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, தண்டவாளத்தில் பெரிய விரிசல் ஏற்பட்டிருப்பதை அவர் பார்த்திருக்கிறார்.
இதையடுத்து அந்தப் பகுதியின் வழியே, அடுத்ததாக வரும் ரயில் ஓட்டுனருக்கு இதுபற்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் நினைத்துள்ளார்.
ரயிலை நிறுத்த தேவையான எதுவும் அக்கம் பக்கத்தில் தென்படவில்லை. இதையடுத்து தான் அணிந்திருந்த சிவப்பு சேலையை, மர குச்சிகளின் உதவியோடு தண்டவாளத்தின் குறுக்கே கட்டி விட்டார் ஓம்வதி.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் இடாவில் இருந்து துண்ட்லாவை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் அங்கு வந்துள்ளது.
தண்டவாளத்தின் குறுக்கே கட்டப்பட்ட சேலையை ஓட்டுனர் பார்த்ததால், ரயிலை அவர் நிறுத்தி விட்டார்.
இதன்பின்னர் விரிசல் பற்றி அவர் அறிந்ததும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, சரி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
சுமார் ஒரு மணி நேர விரிசல் நீக்கத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவம் தொடர்பான விபரத்தை சச்சின் கவுஷின் என்ற காவலர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
மூதாட்டி ஓம்வதியின் வீரத்தையும், பொறுப்பு மிக்க செயலையும் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.
11 வருஷமா ஆசையாய் வளர்த்த நாய்க்கு சிலை வைத்து வழிபடும் முதியவர்