டீ-யில் விஷம் கலந்து குழந்தைகளை கொன்ற தாய்! எழுதி வைத்திருந்த கண்ணீர் கடிதம் சிக்கியது
தமிழகத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
திருச்சிராப்பள்ளியின் வரதன்கோன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 37), இவருடைய மனைவி நித்யா.
இவர்களுக்கு நல்லகண்ணு (6), ரோகித் (4) என இரு குழந்தைகள் இருக்கின்றனர், இந்நிலையில் முருகேசனுக்கும், நித்யாவுக்கு அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது.
இதனால் கோபித்துக்கொண்டு நித்யா, அவரது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார், இதற்கிடையே மனைவியை சமாதானப்படுத்தி முருகேசன் அழைத்து வந்துள்ளார்.
மீண்டும் இருவருக்கும் பிரச்சனை எழ, பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
இதன்படி, எலிகளை கொல்ல பயன்படுத்தும் பசையை (விஷம்) டீயில் கலந்து தனது இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்துவிட்டார்.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் 3 பேரையும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் நித்யா நேற்றுமுன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று அதிகாலை, அவருடைய மகன் ரோகித்தும், மகள் நல்லகண்ணும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நித்யா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது கணவர் மற்றும் கணவரின் அக்காள் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தை கைப்பற்றிய மணப்பாறை போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.