மருமகனை கூலிப்படை ஏவி கொன்ற மாமியார்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி
சென்னையில் மருமகனைக் கூலிப்படை அமைத்து கொன்ற மாமியார் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, விசாரணையில் வெளிவந்த பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி உள்ள வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31).
இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் திகதி, ஆவடி-வீராபுரம் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை வழக்குப் பதிவு செய்து விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி பொலிஸார், இந்த கொலையை செய்தது திருவல்லிகேணியை சேர்ந்த கார்த்திக், குமார் மற்றும் அரவிந்த என்பதை கண்டுபிடித்தனர், பின்னர் அவர்களை கைது செய்து விசாரித்ததில், அவர்கள் சகுந்தலா என்பவர் தான் பணம் கொடுத்து கொல்ல சொன்னதாக வாக்குமூலம் கொடுத்தனர்.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த 42 வயதான சகுந்தலாவை கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக போலீசார் தேடிவந்துள்ளனர். இந்த சூழலில், அவரைப் பற்றிய ரகசிய தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஆவடி டேங்க் பேக்டரி பொலிஸார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சகுந்தலாவிற்கு 2 மகள்கள் உள்ளனர்.
அதில் தனது மூத்த மகளை பிரகாஷுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் திருவல்லிக்கேணியில் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளனர். இந்த நிலையில், பிரகாஷ் அடிக்கடி சகுந்தலாவின் 2வது மகளிடம் அநாகரிகமாக நடந்துள்ளார்.
இதனை சகுந்தலா கண்டிக்க, அவருக்கும் தொல்லை கொடுத்துள்ளார் பிரகாஷ். பிரகாஷின் கொடுமைகள் தினமும் தொடரவே, பொறுத்துக்கொள்ள முடியாத சகுந்தலா மருமகனை கொலை செய்துவிட முடிவெடுத்துள்ளார்.
இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை பணம் கொடுத்து கொலை செய்ய துண்டியுள்ளார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், சகுந்தலா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.