கோபுரத்தின் மீது கழுகு வட்டமிடுவது ஏன்... ஒரு வேளை கருடன் வர வில்லை என்றால் அது ஆபத்தா?...
ஆலயங்களில் குடமுழுக்கு நடை பெரும் போது கருடன் வட்டமிட்டு ஆசிர்வதிப்பது வழக்கம்.
கருடன் ஏன் கோவில் கோபுரத்தின் மீது வட்டமிடுகிறது என்று பார்க்கலாம்.
கருடன் பட்சி ராஜன். பெருமாளின் வாகனம். பெருமாள் ஆலயங்களில் கருட வாகனத்தில் எழுந்தருளும் காட்சியைப் பார்க்கவே ஏராளமானோர் கூடுவார்கள்.
குடமுழுக்கு நடைபெறும் போது அங்கு ஆறுகால யாக பூஜைகள் நடைபெறும். அந்த யாக பூஜைகள் திருப்தியாக இருந்தது என்பதை உணர்த்தவும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கவுமே கருடபட்சிகள் கோபுரத்தின் மீது வட்டமிடுகின்றன.
நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.
கோபுரத்தின் மேல் கருடன் வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிடும் வரை காத்திருப்பார்கள்.
வானத்தில் கருடனைப் பார்த்த பின்னரே கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும்.
ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கு நடத்தப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு.
தத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத் என்று சொல்லி கருடனை வணங்கலாம். கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும்.
பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம்.
பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது.