இளைஞர்களைத் தாக்கும் முழங்கால் வலி - முக்கிய காரணங்கள் என்ன?
Why Are More Young People Experiencing Knee Pain? : பொதுவாக வயதானவர்களுக்கே முழங்கால் வலி ஏற்படும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், தற்காலத்தில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையேயும் முழங்கால் வலி அதிகரித்து வருகிறது.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, உடற்பயிற்சியின்மை, உடல் எடை அதிகரிப்பு மற்றும் தவறான உடற்பயிற்சிப் பழக்கங்கள் ஆகியன இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றது.

இது குறித்து எலும்பியல் நிபுணர் டாக்டர் தியாகராஜன் பாண்டியன் விளக்கமளித்துள்ளார். அதன் பிரகாரம் இளம் வயதில் முழங்கால் வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய காரணங்கள்
உடற்பயிற்சியின்மை மற்றும் தசைப் பலவீனம்: நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதும், போதிய உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதும் தொடை மற்றும் இடுப்புப் பகுதியிலுள்ள தசைகளின் வலிமையைக் குறைக்கலாம். இந்தத் தசைகள் பலவீனமடைவதால் முழங்கால் மூட்டுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு குறைந்து, அதன் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகலாம்.

முழங்கால் சில்லு (Kneecap) தொடர்பான பாதிப்பு: முழங்கால் சில்லுக்கும் அதைச் சுற்றியுள்ள தசை மற்றும் திசுக்களுக்கும் இடையே ஏற்படும் உராய்வு அல்லது இயக்கச் சீர்கேடு காரணமாக வலி ஏற்பட அதிக வாய்ப்பு காணப்படும்.
குறிப்பாக, படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது இறங்கும்போது, ஓடும்போது, நீண்ட நேரம் அமர்ந்திருந்து எழும்போது, குத்துக்காலிட்டு அமரும்போது முழங்காலின் முன்பகுதியில் வலி அதிகமாக உணரப்படும்.

உடல் எடை அதிகரிப்பு: உடல் எடை அதிகரிப்பதால் முழங்கால் மூட்டுகள் தாங்க வேண்டிய சுமையும் அதிகரிக்கிறது. இதனால் மூட்டுகளின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, நடக்கும்போதும், படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போதும் வலி மற்றும் அசௌகரியம் அதிகரிக்கும்.
முறையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி: உடலின் திறன் மற்றும் சகிப்புத்தன்மைக்கு ஏற்றவாறு இல்லாமல் திடீரெனக் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது முழங்கால் மூட்டுகள், தசைகள் மற்றும் தசைநார்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
முறையான பயிற்சி இல்லாமல் அதிக எடைகளைத் தூக்குவது, அதிக தூரம் ஓடுவது போன்ற செயல்களும் முழங்கால் வலிக்குக் காரணமாக அமையும்.

மூட்டு மற்றும் தசைநார் தொடர்பான பாதிப்புகள்: இளம் வயதினருக்கும் சில நேரங்களில் தசைநார் கிழிவு அல்லது காயம், மூட்டு அழற்சி, குருத்தெலும்புப் பாதிப்பு மற்றும் மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இத்தகைய பாதிப்புகள் முழங்காலில் வலி, வீக்கம், இறுக்கம் மற்றும் நடமாட்டத்தில் சிரமம் போன்ற அறிகுறிகளை உருவாக்கும்.
முழங்கால் வலியைத் தவிர்ப்பது எப்படி?
தினமும் நடைப்பயிற்சி மற்றும் எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்க்கவும். தொடை மற்றும் இடுப்புத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்யுங்கள்.
ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள். உடலின் திறனுக்கு ஏற்ப படிப்படியாக உடற்பயிற்சியை அதிகரியுங்கள்.

முழங்கால் வலியை அலட்சியப்படுத்தாமல் தொடர்ந்து வலி அல்லது வீக்கம் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். முக்கியமாக, முழங்கால் வலி என்பது வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சினை அல்ல.
இளம் வயதிலேயே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் முழங்கால் பாதிப்புகளின் அபாயத்தைக் குறைக்கலாம். முக்கியமாக முழங்கால் வலியை அலட்ச்சியபடுத்தாது உரிய முறையில் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |