குளிக்கச் சென்ற இடத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்... தாயுடன் மாணவிகள் பரிதாப மரணம்
குளத்தில் குளிப்பதற்காக தாய்-மகளுடன் சென்ற பக்கத்து வீட்டு சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் திண்டுக்கல் அருகே நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரி செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் திண்டுக்கல் கூட்டுறவு மொசைட்டியில் சேல்ஸ்மேனாக வேலை செய்கிறார்.
இவரது மனைவி ராதா (38). இவர்களது மகள் பவ்யா (12 ). ராதா, மகள் பவ்யாவை அழைத்துக் கொண்டு இன்று மேட்டுக்கடை அருகே உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் தண்டபாணி என்பவரின் மகள் சரஸ்வதி (13) என்பவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
சரஸ்வதி, அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். குளத்தில் 3 பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழம் தெரியாமல் மூவரும் தண்ணீரில் மூழ்கினர். ஆழம் அதிகமாக இருந்ததால் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதை அந்த பகுதியில் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பொலிசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து மூன்று பேர் உடலையும் மீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து சாணார்பட்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.