தன்னைப்பற்றி தவறாக எழுதிய பத்திரிக்கையாளர்... அவரது குடும்பத்திற்கு விவேக் செய்த உதவி என்ன தெரியுமா?
நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், இவரைக் குறித்த பல சுவாரசியமான சம்பவங்களை பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.
மாரடைப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தற்போது வரை அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விவேக் குறித்த அரிய காணொளிகளையும், மரக் கன்றுகளை நட்டும் தங்களது இரங்கல்களை ரசிகர்கள் தெரிவித்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
இந்நிலையில் நடிகர் விவேக் குறித்து மூத்த நடிகரான ராஜேஷ் கூறியுள்ள சுவாரசியமான விடயங்களை காணலாம்.

மலேசியாவில் நடிகர் குமரிமுத்து நாடகம் ஒன்றிற்கு சென்றால் தனக்கு ரூ.50 கிடைக்கும் என்பதால் விவேக்கை தொடர்பு கொண்டு அண்ணா என்னுடன் மலேசியா வருகிறீர்களா நாடகம் ஒன்று இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
அதற்கு விவேக் தனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கேட்டதற்கு, நடிகர் குமரிமுத்து இரண்டு லட்சம் வாங்கித்தருவதாக கூறியதையடுத்து மலேசியாவிற்கு குமரிமுத்துவுடன் சென்றதுடன் அங்கு சிறப்பாக நாடகத்தையும் முடித்துள்ளனர்.
நாடகம் முடிந்ததும் குமரிமுத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டதோடு, விவேக்கிற்கு கிடைக்கவிருந்த 2 லட்சத்தினையும் வாங்கிக்கொண்டுவந்து அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது விவேக் உங்களுக்கு 50 ஆயிரம் வந்துவிட்டதா என்று கேட்டுள்ளார்.
குமரிமுத்துவும் நான் வாங்கிவிட்டேன் என்று கூறிய பின்பு, தனது கையில் கொடுத்த இரண்டு லட்சத்தினையும் குமரி முத்துவிற்கு கொடுத்துள்ளார். ஒன்றும் புரியாத குமரிமுத்து நின்ற போது, இந்த இரண்டு லட்சம் பணத்தை வைத்து உங்கள் மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்துங்கள் என்று கூறியதைக் கேட்டு குமரிமுத்து கண்கலங்கியுள்ளார்.
பெயரில் மட்டும் கலைவானர் என்று இல்லாமல் செயலிலும் கலைவானர் என்பதை நிரூபித்துள்ளார் விவேக். இந்த சம்பவத்தினை குறித்த நடிகர் ராஜேஷிடம் குமரிமுத்து கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னை தொடர்ந்து தவறான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதனை விவேக்கும் தொடர்ந்து கவனித்து வந்துள்ள நிலையில், ஒருநாள் திடீரென பத்திரிக்கையாளர் மரணமடைந்துள்ளார்.
இதனை தெரிந்துகொண்ட விவேக் பத்திரிக்கையாளரின் குழந்தைகள் இரண்டு பேரின் பெயரில் ரூ 2 லட்சம் ரூபாய் ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்துள்ள சம்பவமும் தற்போது வெளியாகியுள்ளது. இவ்வாறு விவேக் குறித்து மூத்த நடிகர் ராஜேஷ் கூறியுள்ளார்.