வானவேடிக்கை காட்டிய ஜடேஜாவை பாராட்டிய விராட் கோக்லி.. என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா?
14 -வது ஐபிஎல் சீசனில், முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த பெங்களூர் அணி, சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் படு தோல்வியைத் தழுவியது.
டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த போது, அந்த அணியின் ரன் ரேட், இடையே சற்று குறைந்தது.
இதனால், சென்னை அணி 160 - 170 ரன்கள் வரை அடிக்கும் என்றே அனைவரும் கருதினர். ஆனால், எதிர்பாராத வகையில், பெங்களூர் வீரர் ஹர்ஷல் படேல் (Harshal Patel) வீசிய கடைசி ஓவரில், ஜடேஜா ருத்ர தாண்டவம் ஆடினார்.
அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன், 36 ரன்களை ஜடேஜா எடுத்தார். மேலும், ஒரு நோ பாலுடன் அந்த ஓவரில் 37 ரன்களை ஹர்ஷல் படேல் வாரி வழங்க, ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன்னாக இது பதிவானது.
மேலும், இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக வலம் வந்த ஹர்ஷல் படேல், இந்த போட்டியிலும் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஆனால், இது அத்தனையும் சிதைக்கும் வகையிலான ஆட்டத்தை ஜடேஜா வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி, ஜடேஜா 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜடேஜா, பவுலிங்கிலும் தனது பங்கைக் கச்சிதமாக செய்து அசத்தினார்.
4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த ஜடேஜா, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதே போல, ஒரு ரன் அவுட் மற்றும் கேட்ச் ஒன்றையும் ஜடேஜா எடுத்தார்.

மேலும், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 122 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியும் அடைந்தது.
தனியாளாக பெங்களூரை பந்தாடிய ஜடேஜா, ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இந்நிலையில், போட்டிக்கு பின் பேசிய, விராட் கோக்லி, “இந்த தோல்வி எங்களுக்கு நிறைய விசயங்களை கற்று கொடுத்துள்ளதால் இதை நான் நல்ல விசயமாக தான் பார்க்கிறேன்.
நாங்கள் இந்த போட்டியில் மிக சிறப்பாகவே துவங்கினோம். ஆனால் ஒரே ஒரு வீரர் எங்களை வீழ்த்திவிட்டார்.

மேலும், ஜடேஜா என்பவர் யார்..? அவரால் என்ன முடியும் என்பதை அனைவரும் இன்று பார்த்துவிட்டோம். ஹர்சல் பட்டேல் மிக சிறப்பாக பந்துவீசினார், கடைசி ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்துவிட்டதால் அவரை அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து நீக்கிவிட முடியாது.
அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும். இந்த தோல்வியை நாங்கள் சரியான விதத்தில் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

பின், பேட்டிங்கிலும் எங்கள் பலம் என்ன என்பதை தொடர்ந்து பரிசோதிக்க உள்ளோம். ஜடேஜா இப்படிப்பட்ட பார்மில் இருப்பதை பார்ப்பது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
காயம் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு பிறகு களத்திற்கு வந்த ஜடேஜா பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் மாஸ் காட்டி விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.