மட்டன் குழம்பு கிராமத்து பாணியில் இப்படி செஞ்சுபாருங்க... சுவையை மறக்கவே மாட்டீங்க
பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிடுவதில் அலாதி இன்பம் இருக்கும். சமையல் என்பது மனிதவர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.
குறிப்பாக அசைவ உணவுகள் என்றால் சொல்லும் போதே பெரும்பாலானவர்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
அப்படி அசைவ உணவுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மட்டன் குழம்பை கிராமத்து பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 1 கிலோ
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பிரியாணி இலை - 1
கல்பாசி - சிறிது
பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 3/4 தே.கரண்டி
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
கறி மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
சுடுநீர் - தேவையான அளவு
கரம் மசாலா - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
அரைப்பதற்கு தேவையானவை
துருவிய தேங்காய் - 1/2 கப்
முந்திரி - 5
கசகசா - 1 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 3
செய்முறை
முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, கல்பாசி சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு பச்சை மிளகாயை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மட்டனை சேர்த்து நன்றாக கிளறி, மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் வரையில் வேக வைக்க வேண்டும்.
பின்னர் கிரேவிக்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4-5 விசில் வரும் வரையில் வேகவிட வேண்டும்.
விசில் வருவதற்குள் மிக்சர் ஜாரில், துருவிய தேங்காய், முந்திரி, கசகசா, சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து, குழப்பு கெட்டியாகும் வரையில் கொதிக்க விட்டு, சிறிது கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கலந்து குக்கரை மூடி, மீண்டும் 2 விசில் விட்டு இறக்கினால், அசத்தல் சுவையில் மட்டன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |