எம்மி விருது விழாவில் விஜய் சேதுபதி - தமிழர் பண்பாட்டை பறைசாற்றிய ஆடை!
தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, சர்வதேசத் திரையுலகின் முக்கிய விருது மேடையான 54ஆவது சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சர்வதேச மேடையில் விருது வழங்கிய விஜய் சேதுபதி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த விழாவில், பிரிட்டிஷ் நடிகை ஆண்ட்ரியா ரைஸ்பரோவுடன் இணைந்து விஜய் சேதுபதி விருது வழங்கினார்.

சிறந்த தொலைக்காட்சித் திரைப்படம் / குறுந்தொடர் பிரிவுக்கான விருதை வழங்கிய அவர், சர்வதேச மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் பெருமகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.
விழாவின் சிவப்புக் கம்பள நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்றும், எதிர்பாராத விதமாகக் கிடைத்த இந்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

'மகாராஜா' ஹாலிவுட் ரீமேக் குறித்து கேள்வி
இதற்கிடையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தின் ஹாலிவுட் மறுஉருவாக்கம் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் பிரபல அமெரிக்க நடிகர் மேத்யூ மெக்கானகியைச் சந்திப்பாரா எனக் கேட்கப்பட்டபோது, எம்மி விழாவில் பங்கேற்பதே தனது நியூயார்க் பயணத்தின் முக்கிய நோக்கம் எனப் பதிலளித்தார்.

கவனம் ஈர்த்த ஆடை அலங்காரம்
விழாவில் விஜய் சேதுபதி அணிந்திருந்த ஆடையும் தனிக் கவனத்தைப் பெற்றது. ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த கருப்பு நிற டக்ஸிடோவில், சென்னையின் புகழ்பெற்ற வள்ளுவர் கோட்டத்தின் தேர்வடிவக் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் தங்க நிற ஜரிகை வேலைப்பாடுகள் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம் சர்வதேச மேடையில் நவீன ஆடை அலங்காரத்துடன் தமிழர்களின் பாரம்பரியக் கட்டிடக்கலை மற்றும் பண்பாட்டு அடையாளத்தையும் அவர் அழகாக வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vijay Sethupathi created history by becoming the first Indian to present an award at the 54th International Emmy Awards in New York. He also impressed everyone with his stylish appearance on the red carpet. #VijaySethupathi #InternationalEmmyAwards #IndianCinema https://t.co/JqtBDMwoNH
— the_news_ india 02 (@adhisangathi02) November 24, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |