நடிகர் விஜய்யின் கார் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை நீக்கக் கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ 1 லட்சம் அபராதம் செலுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு நுழைவு வரியை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் விஜய்யை கடுமையாக விமர்சித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, பல விமர்ச்சனங்களையும் முன்வைத்தது.
தேவையில்லாத கருத்துகளை நீக்க வேண்டும். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி கட்ட தயாராக இருக்கிறார். வணிக வரித் துறையினர் சொல்லும் வரியை 7 அல்லது 10 நாட்களுக்குள் செலுத்துவார். மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ 1 லட்சம் அபராதத்தை நீக்க வேண்டும் என விஜய் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த நிலையில் இது வருமான வரி தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், கார் வழக்கில் விஜய்யை விமர்சித்த நீதிபதி சுப்பிரமணியத்தின் ஒட்டுமொத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
விஜய்யை விமர்சித்த தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்குவது பற்றி 4 வாரங்களுக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும்.
வணிகவரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டு வரித் தொகை எவ்வளவு என்பதை சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மீதம் உள்ள 80% வரித் தொகையை அடுத்த ஒரு வாரத்தில் விஜய் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.