சிங்களவர்களை திருமணம் செய்யும் இலங்கை வேடர்கள்…ஆபத்தில் இருக்கும் ஆதி குடியினர்
இலங்கையின் பழங்குடியினர் என கருதப்படும் வேடர் சமூகத்தினர் இலங்கையின் பல பாகங்களில் சிறு குழுக்களாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைமைகளை கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் நவீன நாகரிகத்தின் வருகையால் உறைவிடமாக இருந்த காடுகள் அழிக்கப்பட்டன.
வேட்டையாடுவதற்குத் தடை, காட்டிலே தேன் எடுப்பதற்கு தடை போன்ற பல தடைகளால் வாழ்வியல் முற்றாக மாறி வருகின்றது.
தற்போது தமது பாரம்பரிய தொழில்களை கைவிட்டு விவசாயம், மீன்பிடி போன்று வேறு தொழில்களை நாட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
ஏனைய கலாச்சாரத்தை உள்ளவாங்கும் வேடர்கள்
தமது கலாசாரத்தைக் கைவிட்டு ஏனையவர்களின் கலாசார விழுமியங்களை உள்வாங்க வேண்டிய தேவையேற்பட்டது.
இவ்வாறான நிலைமைகள் குறுக்கிட்ட போதும் இச் சமூகத்தவர் இன்னும் தமது மூதாதையர்கள் பின்பற்றி வந்த வழிபாட்டு முறைகள், உணவு பதனிடும் முறைகள், வாழ்வியல் சடங்குகள் என்பவற்றை இன்று வரை பேணிப் பாதுகாத்து வருவது சிறப்பம்சமாகும்.
வேடர்கள் ஊடக மொழியாக தமக்கேயுரித்தான வேடுவ மொழியைக் கொண்டிருந்தனர். இந்த வேடர் மொழியானது இன்று முற்றாக அழியும் நிலைக்கு வந்து விட்டது.
தமது ஊடக மொழியினை கைவிட்டு பிற மொழிகளை பேச வேண்டிய நிர்ப்பந்தம், வேறு மொழிகளை கற்க வேண்டிய நிர்ப்பந்தம், வேடுவர் எனக்கூறும் போது மற்றவர்கள் தரக்குறைவாக பேசுதல் ஆகிய காரணங்களால் அம்மொழிக்கு அந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆயினும் தமது தெய்வ வழிபாட்டு சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தும் மொழியாக வேடுவ மொழி காணப்படுகின்றது.
இலங்கை மக்கள் தொகையில் 1% க்கும் குறைவான வேடர்களே இன்று வாழ்ந்து வருகின்றனர்.
மத்திய இலங்கையின் ஹைன்னஸ்கிரிய மலைகள் முதல் தீவின் கிழக்கு கடலோர தாழ்நிலங்கள் வரை சிறிய குடியிருப்புகளில் வேடர்கள் சிதறிக் கிடக்கின்றனர்.
இலங்கையில் சிங்கள – பௌத்த மக்கள் இந்தோ ஆரியர்களாக கிமு 543 இல் இலங்கைக்கு வருவதற்கு முன்பே வேடர்கள் தீவு முழுவதும் வாழ்ந்துள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக வேடர்கள் சிங்கள ஆட்சியால் ஒடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இன்றும் அவர்கள் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு காட்சிப் பொருளாக பயன்படுத்தப்படுத்தப்படுகின்றார்கள்.
வேடர்களின் தோற்றம்
மற்ற பழங்குடி போலவே வேடர்களின் தோற்றம் பற்றி சில சான்றுகள் உள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வேடர்களின் மரபணு தொகுப்போடு 48,000 – 3,800 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பாலன்கோடா மனிதனின் எலும்புக் கூடோடு தொடர்பு படுத்துகிறார்கள்.
கொழும்பிலிருந்து 160 கி.மீ தூரத்தில் பாலன்கோடா நகரத்தின் இம்மனிதனின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நகரத்தின் பெயரையே வைத்துள்ளர்.
குணபாண்டில அத்தோ, கண்டிய இராச்சியத்தின் (1476-1818) அரசர்களால் வழங்கப்பட்ட சிங்களப் பட்டமான வேடர்களின் டானிகல மகா பண்டாரலகே பரம்பரையைச் சேர்ந்தவர்.
முதலில் அவர்கள் கிழக்கு இலங்கையின் டானிகல மலையைச் சுற்றியுள்ள காடுகளில் வாழ்ந்தனர்.
சிங்களவர்களுடன் திருமணம்
ஆனால் 1949 இல் இலங்கையில் செயற்கையாக கட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியான சேனநாயக்க சமுத்திரத்தின் கட்டுமானம் இந்த வேட சமூகத்தை இடம்பெயர வைத்தது.
இடம்பெயர்ந்தவர்கள் சிங்களக் கலாச்சாரத்தில் இணைவதோடு, சிங்களவர்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.
பல சிங்கள மக்கள் வேடுவர்களை பின்தங்கியவர்களாகவும் கலாச்சார மற்றவர்களாகவும் கருதியதால், அவர்களில் பெரும்பாலோர், தங்கள் வேடர் மரபை மறைக்க தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டனர்.
இலங்கை வேடர்கள் தற்போதைய நிலை
இலங்கையின் வேடர்கள் மீதான பார்வைகள் மெதுவாக மாறி வருகின்றன.
இப்போது நிலைமை மாறிவிட்டது, மக்கள் அதிகம் படித்தவர்கள், அவர்கள் வேடர்களை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.
எனினும், மக்களுடன் கலந்து விட்டதால் அவர்களை தனியாக அடையாளப்படுத்த விரும்ப வில்லை. இப்படியே மெல்ல மெல்ல
அழிவின் விளிம்பில் வேடர் சமூகம் உள்ளது.