Banana stem chutney: வாழைத்தண்டில் சட்னி செய்வது எப்படி?
பொதுவாக வீடுகளில் வாழைத்தண்டு இருந்தால் அதனை வைத்து பொரியல், கூட்டு தான் செய்வார்கள்.
மாறாக வாழைத்தண்டில் சட்னி செய்யலாம் என பலருக்கும் தெரிந்திருக்காது.
வழக்கமாக நாம் செய்யும் சட்னியிலும் பார்க்க, இந்த சட்னி சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
அத்துடன் வாழைத்தண்டில் இருக்கும் நார்ச்சத்து நாள்பட்ட மலச்சிக்கலை தடுக்கிறது.
அந்த வகையில், வாழைத்தண்டில் எப்படி சட்னி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* வாழைத்தண்டு - 1 கையளவு
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* வரமிளகாய் - 4
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 1
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
முதலில் வாழைத்தண்டில் உள்ள நார்பகுதியை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, வேர்க்கடலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்கி எடுத்து, வாழைத்தண்டை சேர்த்து நன்றாக வதங்க விடவும்.
அதனுடன் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு தூவி கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
வதக்கிய வாழைத்தண்டில் சூடு இறங்கியவுடன் ஜாரில் போட்டு பொட்டுக்கடலை, தேங்காய் சேர்த்து நீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும்.
அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, தாளிப்பை கொட்டி கிளறி விட்டால் சுவையான வாழைத்தண்டு சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |