சத்துமிக்க வாழைத்தண்டு சட்னி...
வாழையை எடுத்துக் கொண்டால், வாழைக்காய், வாழைப்பூ, வாழைப்பழம், வாழைத்தண்டு என அனைத்து பாகங்களுமே பயன்படுத்தக் கூடியது. நாம் தேங்காய் சட்னி, புதினா சட்னி என பலவற்றில் சட்னி செய்து சாப்பிட்டிருப்போம்.
ஆனால், வாழைத்தண்டில் சட்னி செய்து சாப்பிட்டதுண்டா? வாழைத்தண்டில் சிறுநீரக கற்கள் விரைவில் கரையும், தேவையற்ற உடல் பருமன் குறையும், சிறுநீரை பெருக்கும் தன்மையும் உண்டு. இவ்வாறு உடலுக்கு பல நன்மைகளைத் தரும் வாழைத்தண்டு சட்னி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1 கப் (நறுக்கியது)
தேங்காய்த் துருவல் - 10 தேக்கரண்டி
உளுந்து - 3 தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு - 4 பல்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 2
மல்லி - 1 தேக்கரண்டி
வெள்ளை எள் - 2 தேக்கரண்டி
புளி - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
கறிவேப்பிலை, கடுகு, உளுந்து - சிறிதளவு
செய்முறை
முதலில் வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தமாக்கவும்.
பின்னர் வாணலியில் மல்லி, காய்ந்த மிளகாய், உளுந்து, சீரகம், வெள்ளை எள் என்பவற்றை வறுத்து ஆறவிட வேண்டும்.
பின்பு வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, வாழைத்தண்டை சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்க வேண்டும்.
வாழைத்தண்டு ஆறியவுடன், ஏற்கனவே வதக்கியவற்றுடன் புளி, தேங்காய்த் துருவல், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, உப்பு என்பவற்றுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தில் அரை கரண்டி எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
வாழைத்தண்டு சட்னி தயார்.