குடிபோதை கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் வயிற்று வலி! யாரும் உதவிக்கு இல்லை! பிரசவம் பார்த்த காவலர்
உத்தரப்பிரதேசத்தில் குடிபோதை கணவருடன் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், பணியில் இருந்த பெண் காவலரே பிரசவம் பார்த்த நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் ஜலதாப்பூரைச் சேர்ந்த தினேஷ் குமார், கர்ப்பிணியாக இருக்கும் மனைவி ரேகா குமார் மற்றும் மாமியார் கவுசல்யாவுடன் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
பேருந்தில் சென்ற அவர்கள் சாஜன்பூரில் இறங்கி உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக ரேகா தேவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
தினேஷ் குமார் போதையில் இருந்ததால் என்னசெய்வதென்று அவருக்கு தெரியவில்லை. அவர்களுடன் இருந்த மாமியார் கவுசல்யா, உதவி கேட்டு கத்தி கூச்சல்போட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த விகாஸ் குமார் என்பவர் உதவிக்கு வந்து, பிரசவ பெண்களுக்கான ஆம்புலன்ஸூக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், யாரும் உதவிக்கு வரவில்லை.
காவல்துறையினர் மட்டுமே உதவ முடியும் என நினைத்த விகாஷ் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தார்.
சூழலைக் கேட்ட காவல்துறையினரும், உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்துள்ளனர். தலைமைக் காவலர் மன்வீர் சிங் மற்றும் வின்டு புஸ்கர் ஆகியோர், ரேகா தேவியின் நிலையை பார்த்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது என்பதை யூகித்து, அருகில் இருந்த கடைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
பெண் காவலர் வின்டு புஸ்கரே ரேகாவுக்கு பிரசவமும் பார்த்துள்ளார். நல்லபடியாக குழந்தை பிறந்த பிறகு, தாய் மற்றும் சேயை பத்திரமாக மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.