உலகை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்ட இளைஞன்: என்ன செய்தார் தெரியுமா?
உலகை சுற்றி பார்ப்பதற்காக 12 ஆண்டுக்கு சொகுசு கப்பலில் ரூ.2.4 கோடி செலவு செய்த அமெரிக்க இளைஞர் பற்றிய செய்தி தான் இது.
பொதுவாகவே அனைவருக்கும் உலகில் உள்ள எல்லா மூலை முடுக்கெல்லாம் செல்ல வேண்டும் என்ற ஒரு அவா இருக்கும். ஆனால் அதற்கு மிக முக்கியம் பணம் தான்.
வேலையையும் செய்துக் கொண்டு உலகையும் சுற்றிப்பார்க்க வேண்டும். அந்தவகையில் உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என ஒரு இளைஞன் செய்திருக்கும் செயல்தான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
கப்பலை குத்தகைக்கு எடுத்த இளைஞன்
அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்டின் வெல்ஸ் என்ற 28 வயது இளைஞன் இவர் மெட்டா நிறுவனத்தில் ரியாலிட்டி பிரிவில் வேலைபார்த்து வருகிறார்.
ஒருவர் வேலையும் பாதிக்காமல், உலகத்தையும் சுற்றிப்பார்க்கும் வகையில் இளைஞர் MV Narrative என்ற சொகுசு கப்பலில் 12 ஆண்டுக்கு ஒரு அப்பார்ட்மெண்டை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
இந்த சொகுசு கப்பலில் பள்ளி, கல்லூரி, ஒன்லைன் வசதி, வங்கி, திரையரங்கம், உணவகம், நூலகம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், அழகு நிலையம் என ஒரு குட்டி நகரமே கப்பலில் உள்ளது.
அத்தோடு 547 வீடுகளும் இருக்கிறது. இந்த விடயம் குறித்து ஆஸ்டின் வெல்ஸ் கூறுகையில், "வீட்டில் இருந்து பணியாற்றுவதில் எந்த சுவாரசியமும் இல்லை. இதனால் சொகுசு கப்பலில் அப்பார்ட்மெண்டை குத்தகைக்கு எடுத்துள்ளேன்.
இதன் மூலம் உலகை சுற்றி வர உள்ளேன். கடல் அழகை ரசித்துக் கொண்டே எனது அலுவலக வேலைகளையும் பார்க்கப்போகிறேன். விமானம் மூலம் சென்ற பிறகு, ஒரு ரூமை வாடகைக்கு எடுத்தால் போதும். இப்போது உலகமும் என்னுடன் பயணிக்கப்போகிறது" என தெரிவித்துள்ளார்.