கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்: மருத்துவர் பரிந்துரைக்கும் 3 காய்கறிகள்
நமது உடலின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரல், உடலில் சேரும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது , செரிமானத்திற்குத் தேவையான பொருட்களை உருவாக்குதல், ஊட்டச்சத்துக்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கியப் பணிகளைச் செய்கிறது.
உடல் எடை, செரிமானம், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றில் கவனம் செலுத்தும் நாம், கல்லீரல் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

கல்லீரல் பாதிக்கப்படும்போது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். நல்ல செய்தி என்னவெனில், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். குறிப்பாக, சில காய்கறிகளைத் தொடர்ந்து உணவில் சேர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
அந்தவகையில், எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை–குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, கல்லீரல் ஆரோக்கியத்திற்காகத் தான் ஒவ்வொரு வாரமும் சாப்பிடும் மூன்று எளிதில் கிடைக்கக்கூடிய காய்கறிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
பீட்ரூட்

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கிய காய்கறிகளில் பீட்ரூட்டும் ஒன்று. இதில் உள்ள பீட்டாலைன்கள் பீட்ரூட்டின் அடர் சிவப்பு நிறத்திற்குக் காரணமாக இருப்பதுடன், உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இதனால் கல்லீரலின் செயல்பாடு சிறப்பாக இருக்க உதவும்.
ப்ராக்கோலி

கல்லீரல் ஆரோக்கியத்திற்காக டாக்டர் பரிந்துரைக்கும் மற்றொரு காய்கறி ப்ராக்கோலி. இதில் உள்ள சல்ஃபோராஃபேன் கல்லீரலின் இயற்கையான நச்சு நீக்கும் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கிறது. ப்ராக்கோலி பிடிக்காதவர்கள் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளையும் சாப்பிடலாம்.
பாகற்காய்

பாகற்காய் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவக்கூடும். இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. குறிப்பாக, கொழுப்பு கல்லீரலுடன் தொடர்புடைய காரணிகளில் ஒன்றான இன்சுலின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவது, மறைமுகமாக கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |