தீராத நோய்களை தீர்க்கும் கோவில்: வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே திறந்திருக்குமாம்!!
தமிழகத்தின் பெரம்பலூருக்கு அருகே அமைந்துள்ள கிராமம் சிறுவாச்சூர், இங்குள்ள கோவிலில் அன்னை காளி அதிதியாய் வந்து, அனுகிரகம் செய்து அங்கேயே கோயில் கொண்டு அருள்புரிகிறார்.
நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை நோக்கி, உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியனவற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்தியபடி இடது திருவடியை மடித்து அமர்ந்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றியிருக்கிறாள்.
ஆதிசங்கரர் இந்தப் பகுதி வழியாக வந்தபோது தாகம் ஏற்பட்டதாகவும் அப்போது மதுரகாளியம்மன் இந்தத் திருவடிவத்தோடு தோற்றமளித்து அங்கே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். அதாவது அரிசியாகக் கொண்டு சென்று அங்கே இருக்கும் உரலில் இட்டு இடித்து அங்கேயே மாவைத் தயார் செய்து மாவிளக்கிடவேண்டும்.
பூஜையின் போது நடைபெறும் முதல் தீபாராதனை, செல்லியம்மன் உறையும் மலை நோக்கியே காட்டப்படும். பின்பே மதுரகாளியம்மனுக்குக் காட்டப்படும்.
வாரத்தில் இருநாள்கள் திறக்கப்படும் இந்த சந்நிதியில் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறும். பூஜை நேரத்தில் இரண்டு கோடாங்கிகள் கருவறை மண்டபத்துக்கு வெளியே அருள்வந்து மதுரகாளி மற்றும் செல்லியம்மனின் சரிதத்தைப் பாட்டாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடி முடித்த பிறகுதான் தீபாராதனை நடைபெறுவது வழக்கம்.
இங்கு மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர்.
இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள்.