90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த சுவையான தேன் மிட்டாய்! வீட்டிலேயே செய்வது எப்படி?
90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று தேன் மிட்டாய். நினைத்தாலே நாவில் நீரினை வரவழைக்கும்.
தேன் மிட்டாயினை வாயில் போட்டு லேசாகக் கடிக்கும்போது, அதனுள் இருக்கும் சர்க்கரைப்பாகு தேனாக இனிக்கும்.
சிவப்புக் கலரில் கண்ணைக் கவரும் தேன் மிட்டாய், நான் பள்ளியில் பயிலும் காலங்களில் தினந்தோறும்.
இதனை எளிதான முறையில் சுவையாக நம்முடைய வீட்டிலேயே தயார் செய்து உண்ணும்போது நம்முடைய நினைவில் என்றைக்கும் இருந்து கொண்டே இருக்கும்.
சுலபமான முறையில் தேன் மிட்டாய் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி – 1 கப்
- உளுந்தம் பருப்பு 1/4 கப்
- கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
- உப்பு – 1 சிட்டிகை
- வெள்ளை சர்க்கரை – 1 கப்
- தண்ணீர் – 1 கப்
- ஆரஞ்சு வண்ண உணவுக் கலர் பொடி – 2 சிட்டிகை
தேன் மிட்டாய் செய்முறை
முதலில் அரிசியையும், பருப்பையும் தனித்தனியே நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரிசியையும் பருப்பையும் தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசியையும் பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த அரிசி உளுந்து மாவுடன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றிக் காய விடவும். எண்ணெயின் மேற்பரப்பில் ஆவி வெளியேறும் சமயத்தில், அரிசி உளுந்து மாவில் சிறிதளவு எடுத்து எண்ணெயில் போடவும்.
மாவானாது எண்ணெயில் போட்டதும், மேலெழும்பினால் எண்ணெய் சரியான சூடு பதத்தில் உள்ளது என்பது பொருள்.
அரிசி உளுந்து மாவில் சிறிதளவு கையில் எடுத்து, உருட்டி எண்ணெயில் போடவும். அல்லது சிறிய ஸ்பூனால் மாவினை எடுத்து எண்ணெயில் போடவும்.
உருண்டைகள் லேசாக வெந்ததும் வெளியே எடுத்து விடவும். அதாவது உருண்டையை அழுத்தினால் மிருதுவாக உடையாமல் இருக்க வேண்டும். உருண்டைகளை நன்கு வேக வைத்து எடுக்கக் கூடாது.
ஏனெனில் உருண்டைகள் மொறு மொறுப்பாக வெந்தால் சர்க்கரைப் பாகினை உள்ளிழுக்காது.
எல்லா மாவினையும் உருண்டைகளாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெள்ளைச் சர்க்கரையைச் சேர்க்கவும். அதில் தண்ணீரைச் சேர்க்கவும்.
அதனுடன் 2 சிட்டிகை ஆரஞ்சு வண்ண உணவு கலர் பொடியைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறவும். சர்க்கரை முழுவதும் கரைந்து ஒருகம்பிப் பதம் வந்ததும், அடுப்பினை அணைத்து விடவும்.
சர்க்கரைப் பாகில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளைச் சேர்த்து நன்கு கிளறவும். உருண்டைகள் சர்க்கரைப் பாகினை சிறிது சிறிதாக உள்ளிழுக்க ஆரம்பிக்கும். ஆதலால் அவ்வப்போது உருண்டைகளை கரண்டியால் நன்கு கலந்து விடவும்.
மூன்று மணி நேரம் கழித்துப் பார்த்தால், உருண்டைகள் எல்லா சர்க்கரைப் பாகினையும் உள்ளிழுத்து ஊறி இருக்கும்.