யூடியூப் பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட 15 வயது சிறுமி
அன்றாடம் பல சம்பவங்களை நாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். சில சம்பவங்கள் நம்மை சந்தோஷமாகவோ, கவலையாகவோ மாற்றிவிடும். ஆனால், ஒரு சில சம்பவங்கள் நம்மை கோபத்துடனான வியப்பில் ஆழ்த்தி, “இப்படியும் நடக்குமா?”என்று சிந்திக்க வைக்கும்.
அப்படியொரு சம்பவம் தான் மும்பை, மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்துள்ளது.
15 வயதான சிறுமியொருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
வீட்டிலுள்ளவர்களுக்கு இதுகுறித்து தெரிய வந்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்ற பயத்தில் தனது கர்ப்பத்தை மறைத்து தனியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
பிரசவத்துக்கான நேரம் நெருங்க நெருங்க, மருத்துவமனைக்குச் சென்றால், இந்த விடயம் வெளியில் தெரிந்துவிடுமோ எனப் பயந்து தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் தெரிவு செய்தது யூடியூப் வலைத்தளத்தை.
கடந்த மார்ச் 2ஆம் திகதி குறித்த சிறுமிக்கு பிரசவ வலி வரவே, யூடியூப்பில் பிரசவ வீடியோக்களை பார்த்து, சுயமாக பிரசவம் பார்த்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை மறைப்பதற்காக தனக்குப் பிறந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, உடலை வீட்டிலுள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார். சிறுமியின் தாய் வீடு திரும்பியதும் தனது மகள் பலவீனமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, விசாரித்துள்ளார்.
குறித்த சிறுமி தனக்கு நேர்ந்த விடயங்கள் அனைத்தையும் தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இந்த விடயத்தை காவல் துறைக்கு தெரிவித்துவிட்டு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரியொருவர் தெரிவிக்கையில்,
"இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னர் இக் குற்றம் தொடர்பான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும்.
அதுமட்டுமின்றி சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான நபரை தேடி வருகிறோம்" எனவும் கூறியுள்ளார்.