நாவில் எச்சில் ஊற வைக்கும் அன்னாசி சட்னி... வெறும் 10 நிமிடம் போதும்!
பொதுவாகவே வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படும் அன்னாசியில் புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் அதிகளவில் காணப்படுகின்றது.
இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. மேலும் தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. தினசரி உணவில் அன்னாசி சேர்த்துக்கொள்வதால், காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்க துணைப்புரிகின்றது. இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.
இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சோர்வின்றி செயல்பட, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த அன்னாசியை கொண்டு கோடை காலத்துக்கு இதமாக நாவூரும் சுவையில் அன்னசி சட்னி எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
4 -கிராம்பு
2 -நட்சத்திர சோம்பு
1 தேக்கரண்டி - திராட்சை
1 - இலவங்கப்பட்டை குச்சி
1/2 தேக்கரண்டி - மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி - இஞ்சி விழுது
1/2 தேக்கரண்டி - மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி - கருப்பு கடுகு
1 1/2 தேக்கரண்டி - பழுப்பு சர்க்கரை
4 - ஏலக்காய்,
1/4 கப் - தேங்காய் எண்ணெய்
500 கிராம் - அன்னாசிப்பழம் (துண்டுகளாக நறுக்கியது.
கறிவேப்பிலை
செய்முறை
ஒரு நடுத்தர அளவிலான, தடிமனான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி சூடானதும், அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து மணம் வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை சில நிமிடங்கள் கொதிக்க விட்டு வற்றியதும் இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் அன்னாசி சட்னி தயார்.
பின்னர் சட்னியை குளிரவிட்டு காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவையாக நேரங்களில் பயன்படுத்தலாம். இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
