நாவூரும் சுவையில் பள்ளிப்பாளையம் முட்டை வறுவல் ... பண்ணலாமா?
பொதுவாகவே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முட்டை பல்வேறு வகைகளிலும் சமைக்கக்கூடிய ஒரு எளிமையான உணவுப்பொருள் என்பதுடன் புரதத்தின் மிகச்சிறந்த மூலமாகவும் திகழ்கின்றது.
வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், குறிப்பாக முட்டை வெறியர்களை குஷியாக்கக்கூடிய காரசாரமான பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
5 முட்டை (வேகவைத்து, தோலுரித்து நறுக்கியது)
15 வரமிளகாய்
5 பூண்டு பல்
½ டீஸ்பூன் - மிளகுத்தூள்
¼ டீஸ்பூன்- சோம்புத்தூள்
1 டீஸ்பூன்- கொத்தமல்லித்தூள்
¼ டீஸ்பூன் -கரம் மசாலாத்தூள்
¼ டீஸ்பூன் - சீரகத்தூள்
2 டேபிள்ஸ்பூன் - தேங்காய் எண்ணெய்
4 - வரமிளகாய் (விதை நீக்கியது)
2 கொத்து - கறிவேப்பிலை
3 டேபிள்ஸ்பூன் - தேங்காய்த் துண்டுகள் (நறுக்கியது)
1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
10 சின்ன வெங்காயம் (நறுக்கியது)
1 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
1 தக்காளி (பொடியாக நறுக்கியது)
½ டீஸ்பூன் மஞ்சள்தூள்
தேவையான அளவு உப்பு

செய்முறை
முட்டைகளை உப்பு சேர்த்து வேகவைத்து, தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வரமிளகாய் மற்றும் பூண்டைப் போட்டு 2–3 நிமிடங்கள் வேகவிடவும். ஆறியதும் நைசாக அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அரைத்த மிளகாய் விழுதுடன் மிளகுத்தூள், கொத்தமல்லித்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து 2–3 நிமிடங்கள் வதக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.

அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, விதை நீக்கிய வரமிளகாயை அரை நிமிடம் வதக்கவும்.பின்னர் கறிவேப்பிலையைச் சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும். அடுத்து நறுக்கிய தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து லேசாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்.
பின்னர் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். தக்காளி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து, தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும்.

இப்போது தயார் செய்து வைத்துள்ள மிளகாய் மசாலா விழுதைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து, கலவை கெட்டியான பதத்திற்கு வரும் வரை சமைக்கவும்.
நறுக்கிய முட்டைத் துண்டுகளைச் சேர்த்து மெதுவாகக் கிளறி, மசாலா நன்கு ஒட்டும் வரை 2–3 நிமிடங்கள் வாணலியில் வைக்கவும். சுவையான மற்றும் காரசாரமான பள்ளிப்பாளையம் முட்டை மசாலா தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |