muttai sukka: நாவூரும் சுவையில் காரசாரமான முட்டை சுக்கா... எப்படி செய்வது?
பொதுவாகவே முட்டை என்றால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடிக்கும்.
மேலும் இது ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாகவும் பார்க்கப்படுகின்றது.
முட்டை கொண்டு ஆம்லெட், முட்டை மசாலா, முட்டை தொக்கு, முட்டை வறுவல் என விதவிதமாக செய்து சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் எப்போதாவது முட்டை கொண்டு சுக்கா செய்து சாப்பிட்டுள்ளீர்களா? மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
முட்டை -6
எண்ணெய் -4 தே.கரண்டி
இலவங்கப்பட்டை -1 துண்டு
சோம்பு - கால் தே.கரண்டி
பச்சை மிளகாய் -3 நறுக்கியது
கறிவேப்பிலை -சிறிதளவு
சின்ன வெங்காயம் -20 நறுக்கிய
கரம் மசாலா -1 தே.கரண்டி
மிளகாய்த்தூள் -1 தே.கரண்டி
கொத்தமல்லி -சிறிதளவு
அரைக்க தேவையானவை
மிளகு - 2 தே.கரண்டி
சீரகம் -1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து முட்டை மற்றும் சிறிதளவு உப்பு சேத்து தண்ணீர் ஊற்றி வேகவதை்து எடுத்து, முட்டையை பக்குவமாக உரித்து வைத்துக் கொள்ள கொள்ள வேண்டும்.
இதற்கிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் முட்டையின் வெள்ளை கருவை சிறு சிறிதாக வெட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு அகன்ற பாத்திரதிதை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு கரம் மசாலா, மிளகாய் தூள், கறி மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்த மிளகு, சீரகப் பொடியையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிவிட்டு, அதனுடன் நாம் வெட்டி வைத்திருக்கும் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக மஞ்சள் கருவை சேர்த்து மஞ்சள் கரு உடையாமல் கிளறி விட்டு மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு பின்னர் கொத்தமல்லியை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் காரசாரமான முட்டை சுக்கா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |