vendakkai mor kulambu : ஆரோக்கியம் தரும் வெண்டைக்காய் மோர் குழம்பு
vendakkai mor kulambu : வெண்டைக்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் தனித்துவமான சுவை தான் ஆனால், சுவையைத் தாண்டி பல்வேறு ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ள ஒரு காய்கறி இது.
குறிப்பாக, வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், மலச்சிக்கலைத் தவிர்த்து குடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் துணைபுரிகிறது.

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், சிறிதளவு கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன.
மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், வயிறு நிறைந்த உணர்வைத் தருவதற்கும், சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக உடல் எடையை நிர்வகிக்க உதவுவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கலாம்.
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் எனக் கருதப்படுகிறது.

அதே நேரத்தில், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராகப் பராமரிக்க உதவும் உணவுமுறையில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளுக்கு முக்கிய இடம் உண்டு.
எனவே, சுவையையும் ஆரோக்கியத்தையும் ஒருசேர விரும்புபவர்கள் வெண்டைக்காயை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இத்தனை சிறப்புகளைக் கொண்ட வெண்டைக்காயை வைத்து, வழக்கமான குழம்புகளுக்கு சற்று வித்தியாசமாகவும், நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையுடனும் ஒரு அருமையான வெண்டைக்காய் மோர் குழம்பு எப்படி வெய்யலாம் என இந்த பதிவி்ல் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தயிர் - தேவையான அளவு
வெண்டைக்காய் - ¼ கிலோ
துருவிய தேங்காய் – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
துவரம் பருப்பு – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 6
இஞ்சி – ஒரு துண்டு
வத்தல் – 6
சீரகம் – 10 கிராம்
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
பெருங்காயம் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி விதைகள், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் வத்தல் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறியதும், அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து புளியை சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்து, புளிக் கரைசலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் புளிக் கரைசலை ஊற்றவும்.
அதனுடன் நறுக்கிய வெண்டைக்காய், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெண்டைக்காய் நன்றாக வேகும் வரை சமைக்கவும். வெந்ததும் அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கடைந்து கொள்ளவும்.

அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தயார் செய்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றவும். அதில் வேகவைத்த வெண்டைக்காயையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
மோர் குழம்பு நன்றாக சூடாகி மேலே நுரை வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். மோர் குழம்பை அதிகமாகக் கொதிக்கவிடக்கூடாது.
இறுதியாக, ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்தத் தாளிப்பை மோர் குழம்பில் ஊற்றி நன்றாகக் கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான்சுவையான, மணமிக்க வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |