அசைவத்துக்கே டஃப் கொடுக்கும் அசத்தல் சுவையில் உருளைக்கிழங்கு குழம்பு... பண்ணலாமா?
பொதுவாகவே வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரையில் விரும்பி சாப்பிடும் சைவ உணவுகளின் பட்டியலில் நிச்சயம் உருளைக்கிழங்கு முக்கிய இடம் வகிக்கின்றது.
உருளைக்கிழங்கு அதன் சுவைக்கு மாத்திரமன்றி, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களுக்கும் பெயர்பெற்றது. அதில் வைட்டமின் சி செரிந்து காணப்படுவதால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துவதிலும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

உருளைக்கிழங்கில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இது இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதறகும் பெரிதும் துணைப்புரிகின்றது.
அது மாத்திரமன்றி சப்பாத்தி, பரோட்டா, பூரி, சாதம் என அனைத்து உணவுகளுடனும் பக்காவாக பொருந்தும் உருளைக்கிழங்கை கொண்டு அருமையான சுவையில், அசைவத்துக்கே டஃப் கொடுக்கும் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு தேவையானவை
பூண்டு - 10-15 பல்
இஞ்சி - 1 இன்ச்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 6
புதினா - 10-15 இலைகள்
கொத்தமல்லி - சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை - 4 மேசைக்கரண்டி
தண்ணீர் - சிறிதளவு

தாளிப்பதற்கு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
அரைத்த மசாலா
மல்லித் தூள் - 1 1/2 தே.கரண்டி
சீரகத் தூள் - 1 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1/2தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி, தோலை நீக்கி குக்கரில் போடுங்கள். கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி, வெந்த நீருடன் சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி மற்றும் வறுத்த வேர்க்கடலை சேர்த்து அரைக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேணடும்.
இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேணடும்.

அதனையடுத்து மஞ்சள்தூள் சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி சற்று மென்மையானதும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை அதன் நீருடன் சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி மிதமான தீயில் எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரையில் வேகவிட வேண்டும்.
கடையில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், அவ்வளவு தான் சப்பாத்தி, பூரி அல்லது தோசையுடன் சாப்பிட அருமையான உருளைக்கிழங்கு குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |