நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் ஓட்ஸ் ஊத்தப்பம்... எப்படி செய்வது?
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும், ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களும் விரும்பி உண்ணும் காலை உணவாக ஓட்ஸ் காணப்படுகின்றது.
ஓட்ஸ் தானியத்தை, பால் அல்லது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்தால், சுவையான ஓட்ஸ் உணவுவை எளிமையாக தயாரிக்கலாம்.
ஓட்ஸ் உணவுடன், பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஓட்ஸைக் கொண்டு இட்லி, தோசை, ஊத்தப்பம், குக்கீஸ், ஸ்மூத்தி, உப்புமா போன்ற பலவகையான உணவுகளை சத்தாகவும், சுவையாகவும் தயாரிக்க முடியும்.
அந்தவகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான காலை உணவாக ஓட்ஸ் தானியத்தை பயன்படுத்தி எவ்வாறு ஓட்ஸ் ஊத்தப்பம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 2 கப்
கடலை மாவு - 1/2 கப்
தயிர் - 2 கப்
ரவை - 1/2 கப்
குடைமிளகாய் - 1/4 கப்
முட்டைகோஸ் - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
கேரட் - 1/4 கப்
சீரகம், மிளகு - 1 கரண்டி
முந்திரிப் பருப்பு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் அதில், ரவை மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
ஆறியதும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடலை மாவையும் அதே கடாயில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அரைத்து வைத்த ரவை, ஓட்ஸ் கலவை மற்றும் கடலை மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய காய்கறிகள், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் மிளகு, சீரகம், முந்திரி ஆகியவற்றை பொடியாக்கி அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
தோசை மாவு பதத்திற்கு வந்தவுடன், தோசை கல்லில் எண்ணெய் விட்டு, அதன் மேல் இந்த மாவு ஊற்றி ஊத்தப்பம் போல வேகவைத்து எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த ஊத்தப்பம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |