தஞ்சாவூர் பாணியில் நாவூரும் சுவையில் இஞ்சி புளி ஊறுகாய்... ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும்
பொதுவாகவே விதவிதமதாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்கு தான் பிடிக்காது. சமையல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது.
அந்த வகையில் தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான சுவையில் இஞ்சி புளி ஊறுகாயை தஞ்சாவூர் பாணியில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி - 350 கிராம்
புளி - 1 எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 100 கிராம்
கடுகு - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகாய் தூள் - 3 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
பொடித்த வெல்லம் - 1/4 கப்
செய்முறை
முதலில் இஞ்சியை தோல் உரித்து நன்றாக சுத்தம் செய்து விட்டு பொடியாக துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து 1 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் துருவி வைத்துள்ள இஞ்சியை அதில் சேர்த்து நிறம் மாறும் அளவுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் கொதிக்கவிட்டு கெட்டியான பதத்திற்கு வந்ததும், அதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்றாக கிறவிறிட்டு எண்ணெய் பிரியும் பதத்தில் இறக்கினால் அவ்வளலு தான் அசத்தல் சுவையில் இஞ்சி புளி ஊறுகாய் தயார்.
அதனை நன்கு குளிரவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரையில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |