நேபாள வெள்ளத்தில் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களை காணவில்லை: நடிகை வேதனை
நேபாளம்: திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை உருகல் மற்றும் உடைதலால் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு நேபாளத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்தில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறை ஒன்று திடீரென உருகி உடைந்ததில், அதிலிருந்து வெளியேறிய பெருமளவிலான நீர் அருகிலுள்ள ஏரியில் பாய்ந்ததாக கூறப்படுகிறது.பின்னர் அந்த நீர் கோஷி ஆற்றில் கலந்து, ஆற்றில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளநீர் கட்டுக்கடங்காமல் சீறிப்பாய்ந்ததால், ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலங்கள், சாலைகள் மற்றும் பல்வேறு கட்டடங்கள் உள்ளிட்டவை கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் திபெத்–நேபாள எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகளுக்கான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரால் கைலாச மலைக்கு யாத்திரை சென்றிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திபெத்–நேபாள எல்லைப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த யாத்திரிகர்களும் இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சிக்கியுள்ளவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களின் நிலை குறித்தும் தமிழக அரசு கவனம் செலுத்தியுள்ளது.

நடிகை நிவேதா பெத்துராஜ் பரபரப்பு பதிவு
இதற்கிடையே, நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
கைலாச மலைக்கு யாத்திரை சென்றிருந்த தனது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பலர், நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் இருந்த நிலையில், தற்போது அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல் போனதாகக் கூறப்படும் தனது உறவினர்களின் பெயர், வயது உள்ளிட்ட முழு விவரங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.