நடிகர் தனுஷுடன் ஏன் இதுவரை இணைந்து நடிக்கவில்லை- வடிவேலு விளக்கம்
நடிகர் தனுஷுடன் நீண்ட நாட்களாக இணைந்து நடிக்காதது குறித்து நடிகர் வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.
வடிவேலு விளக்கம்
லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ், ப்ரீத்தி முகுந்தன், வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சிவகங்கையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் வடிவேலு, "மாரனாடு கருப்பணசாமி கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஊரில் பிறந்த ஒவ்வொருவருமே கருப்பசாமிதான்.
இவ்வளவு பெரிய கூட்டத்தையும், மக்களின் அன்பையும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தனுஷ் சாரின் படத்துக்கான பூஜை இவ்வளவு பெரிய விழாவாக நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதுவே ஒரு மாநாடு போல இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்துள்ளது.
ஏன் இடையில் அவருடன் நடிக்கவில்லை என்று பலரும் கேட்கலாம். சினிமாவில் சில விஷயங்கள் சரியான நேரத்தில் அமைய வேண்டும். தற்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த படம் சாதாரணமான படம் கிடையாது. அரசியல் சார்பு இல்லாத தனித்துவமான கதையைக் கொண்ட படம். இந்த கதையை கேட்டபோது மிகவும் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்புகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இன்னும் சில நாட்களில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும்.
மாரனாடு கருப்பசாமி கோயிலில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்கு என்றும் தேவை. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.