புட்டு சாப்பிட்டிருப்பீங்க... சுறா புட்டு சாப்பிட்டிருக்கீங்களா?
சுறா மீனைக் கொண்டு புட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
குறிப்பாக இது வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் அளவில் இருக்கும்.
சுறா புட்டு ஹோட்டல்களில் அதிகம் கிடைக்காது. ஆனால் அதை வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம்.
இங்கு சுறா புட்டு ரெசிபியை வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது
கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும்.
தேவையான பொருட்கள்
- சுறா மீன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 4
- பூண்டு - 20 பல் பெரியது
- இஞ்சி - 1 பெரிய துண்டு
- பச்சை மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லி தூள் - ½ ஸ்பூன்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
- கடுகு - ½ ஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும். இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும். 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும். இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.