110 நாள்கள் ஓடி கின்னஸ் சாதனை படைத்த இந்திய வீராங்கனை Sufiya Khan
தங்க நாற்கரச் சாலையில் 6,002 கிலோமீட்டர் தூரத்தை 110 நாட்களில் ஓடிக் கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் சுஃபியா கான்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் சுஃபியா கான். டெல்லி விமான நிலையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அவர், தடகள விளையாட்டின் மீதிருந்த ஆர்வத்தால் அந்த வேலையை உதறிவிட்டு ஓடத் தொடங்கினார்.
35 வயதான கான், பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கிறார். பெரும்பாலான போட்டிகளில் வாகை சூடியிருக்கிறார். லே-மணாலி நெடுஞ்சாலையின் 480 கிலோமீட்டர் தூரத்தை 6 நாட்கள், 12 மணி நேரம், 6 நிமிடங்களில் ஓடி கடந்திருக்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 87 நாட்களாக இடைவிடாமல் ஓடி கன்னியாகுமரி வந்து சேர்ந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இப்போது மற்றொரு கின்னஸ் சாதனையையும் படைத்திருக்கிறார் சுஃபியா கான்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு முக்கியப் பெருநகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான தங்க நாற்கரச் சாலையில் 6,002 கிலோமீட்டர் தூரத்தை 110 நாட்கள், 23 மணி நேரம், 24 நிமிடங்களில் ஓடிக் கடந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அவர். 16 டிசம்பர் 2020 அன்று டெல்லியில் ஓட்டத்தை தொடங்கிய சுஃபியா கான் ஏப்ரல் 6, 2021 அன்று நிறைவு செய்திருக்கிறார்.
18 மணிநேரம் வங்கி லாக்கரில் சிக்கித் தவித்த முதியவர்! பின்பு நடந்தது என்ன?