ரோட்டுக்கடை ஸ்டைலில் அசத்தல் தக்காளி சட்னி - இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!
பல்வேறு வகையான உணவுகளைப் பெரிய ரெஸ்டாரன்ட்களில் சென்று ருசித்தாலும், சில உணவுகளைச் சாலையோரக் கடைகளில் சாப்பிடும்போது கிடைக்கும் அந்தத் தனித்துவமான சுவையும் திருப்தியும் வேறு எதிலும் கிடைப்பதில்லை.
குறிப்பாக, சூடாகப் பரிமாறப்படும் இட்லி, தோசை, வடை போன்ற உணவுகளுடன் வழங்கப்படும் ரோட்டுக்கடை தக்காளி சட்னி என்றாலே பலருக்கும் நாவில் நீர் ஊறும்.

சாதாரணமாகத் தோன்றினாலும், அந்தச் சட்னியின் மணமும், காரமும், புளிப்பும் கலந்த சுவையும் உணவின் ருசியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
“ரோட்டுக்கடை தக்காளி சட்னியைப் பிடிக்காது” என்று சொல்பவர்கள் இருந்தால், அவர்கள் இன்னும் அதன் உண்மையான சுவையை ருசித்துப் பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

வெளியில் சாப்பிடும்போது கிடைக்கும் அதே சுவையை வீட்டிலேயே, எளிமையான பொருட்களைக் கொண்டு தயாரிக்க முடியும் என்பது இன்னும் சிறப்பான விஷயம். அதனை செய்ய அதிக நேரமும் தேவையில்லை.
அப்படி அனைவரும் விரும்பும் இந்த ரோட்டுக்கடை ஸ்டைல் தக்காளி சட்னியை வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு
தக்காளி - 4
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
அரைத்த தக்காளி
தண்ணீர் - தேவையான அளவு
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
இட்லி மாவு - 1 கரண்டி (நீரில் கரைத்துக் கொள்ளவும்)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தண்ணீர் சூடானதும் 4 தக்காளியையும் அப்படியே சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
தக்காளி வெந்ததும் வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய தக்காளியை மிக்சர் ஜாரில் சேர்த்து நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து சிறிது வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மல்லித்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இதை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். தக்காளியின் பச்சை வாசனை போனதும், இட்லி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து சட்னியில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.
குழம்பு அதிகமாக கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து, மேலும் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான ரோட்டுக்கடை ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |