அம்மி முதல் உலக்கை வரை.... வெள்ளியில் ஜொலிக்கும் சீர்வரிசை
வெள்ளிப் பொருட்களான சீர்வரிசை புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
செட்டிநாடு என்றாலே நம் நினைவுக்கு வருவது அரண்மனை போன்ற வீடுகள் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய செட்டிநாட்டு கைத்தறி கண்டாங்கி சேலைகள் , சாப்பாடு என இந்த வரிசையில் திருமணத்திற்கு சீர்வரிசை வைப்பதிலும் புகழ் பெற்ற ஊர் செட்டிநாடுதான்.
மணப்பெண்ணுக்கு அடுக்கடுக்காக சில்வர் பாத்திர சீர்வரிசை பொருட்களை கொடுத்தாலும் வெள்ளி பொருள்கள் தான் திருமணத்திற்கு அழகு சேர்க்கும் என்பார்கள்.
பெண் குழந்தைகளை அதிகம் நேசிக்கும் பெற்றோர் மகள்களின் திருமணத்தை தடபுடலாக செட்டிநாடு விருந்துடன் ஊர் மக்கள், கிராமத்தார்கள், உறவினர்கள் ஆகியோர் பொறாமைப்படும் அளவிற்கு சீர்வரிசை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைப்பார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த நகரத்தார் திருமண விழாவில் பெற்றோர் மகளின் திருமண சீர்வரிசையில் வெள்ளி பொருள்களாக வைத்து அசத்தியுள்ளனர்.
தமிழகத்தின் பாரம்பரிய பொருள்களான அம்மி , நெல் குத்தும் உலக்கை,ஆட்டுகல், பல்லாங்குழி , பண்டைய காலத்தில் பயன்படுத்திய விளக்கு என எல்லாம் வெள்ளியில் கொடுத்துள்ளனர்.
வெள்ளி அம்மிக்கல், ஆட்டுக்கல், நெல் குத்துக்கல், இட்லி சட்டி,குடங்கள், சங்கு, தாம்பூலம், பல்லாங்குழி ,பாத்திரங்கள், குத்துவிளக்கு என அனைத்தும் வெள்ளிப் பொருட்கள் ஆகவே இருக்க வேண்டும் என எண்ணி பல லட்சம் மதிப்பில் வெள்ளி பொருட்களான சீர்வரிசை செய்து அசத்தியுள்ளார்.
இந்த வெள்ளிப் பொருட்களான சீர்வரிசை தான் சிவகங்கை முழுவதும் பேச்சாக உள்ளது. இதுதொடர்பாக புகைப்படமும் வீடியோவும் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.