செல்பி மோகத்தால் டிராக்டருன் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் பரிதாப பலி- கதறிய ஊர் மக்கள்!
டிராக்டர் ஓட்டுவதை போல,செல்பி எடுத்துகொண்டு வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்த இளைஞர் சிறிது நேரத்திலேயே டிராக்டருடன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (47). இவரது மகன் சஞ்சீவி (19). இவர் கேட்டரிங் படித்து வந்த சஞ்சீவி கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தார்.
இதனையடுத்து, தனது வீட்டின் அருகேயுள்ள விவசாய நிலத்துக்கு சஞ்சீவி சென்றுள்ளார். அப்போது, ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சவுந்தர் என்பவர் டிராக்டரில் ஏர் உழுது கொண்டிருந்தார்.
இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சஞ்சீவி, தனது செல்போனில் அதை வீடியோ எடுத்தார். மேலும், நண்பகல் 1 மணியளவில் உணவு இடைவெளி நேரம் என்பதால் சவுந்தர் டிராக்டரை நிலத்தில் நிறுத்திவிட்டு, அதன் சாவியை எடுக்காமல் சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, டிராக்டரில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி சஞ்சீவி தனது செல்போனில் படம் எடுத்து, அதைத் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார்.
அதன்பின்னர், சாவியை ஆன் செய்து டிராக்டரை இயக்க அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், விவசாய நிலத்தில் தறிகெட்டு ஓடி அங்கிருந்த 120 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்தது. டிராக்டருடன் சஞ்சீவியும் உள்ளே விழுந்தார்.
இதனால், சத்தம் கேட்டு அங்கிருந்த கூலித்தொழிலாளிகள் ஓடி வந்து கூச்சலிட்டுள்ளனர். 120 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் 35 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததால் சஞ்சீவியைக் காப்பாற்றுவது சிரமம் என உணர்ந்த அப்பகுதி மக்கள், அம்பலூர் காவல்துறையினர் மற்றும் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்க முயன்றனர். அது முடியாமல் போகவே, மின் மோட்டார்களைக் கொண்டு கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர்.
அதன் பிறகு கயிறு கட்டி கிணற்றில் இறங்கிய தீயணைப்புத் துறையினர், சுமார் 5 மணி நேரம் போராடி சஞ்சீவியைச் சடலமாக மீட்டனர். பின்னர், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்தவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அவர்களது உறவினர்கள் உடலை ஒப்படைக்கக் கோரி ஆம்புலன்ஸ் வாகனம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் சமாதானம் செய்த போலீசார், சஞ்சீவியின் உடலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுகுறித்து அம்பலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.