Schizophrenia: மனச்சிதைவு நோய்- அறிகுறிகளும், சிகிச்சைகளும்
Schizophrenia என்பது யதார்த்ததிலிருந்து துண்டிக்கப்பட்டு மாயத்தோற்றங்கள் மற்றும் பிரமைகளை உள்ளடக்கியது, இது ஒரு கடுமையான நிலையாகும், அறிகுறிகளை இனம்காணுவதே சிரமமானதாக இருப்பதால் நிச்சயம் சிகிச்சை தேவைப்படக்கூடிய ஒன்றே.
உடல் மற்றும் மனநலனில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதால் மூளை செயலாற்றுவதில் தொடங்கி உங்களது நடத்தைகளிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது, இதனால் தினமும் உங்களது செயல்களில் கூட தடுமாற்றங்களும் உண்டாகலாம்.
உங்களது உறவுகளில் கூட சாதாரணமாக நடந்துகொள்ள முடியாத சூழலை இது உருவாக்குகிறது, 15 முதல் 25 வயதுடைய ஆண்களுக்கும், 25 முதல் 35 வயதுடைய பெண்களுக்கும் வரலாம், 20 சதவிகிதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களாக இருக்கின்றனர்.
குழந்தைகளுக்கு அரிதானது என்ற போதிலும், ஒருவேளை பாதிக்கப்படும் பட்சத்தில் சிகிச்சையளிப்பதும் கடினமாகிறது.
அறிகுறிகள்
* தவறான நம்பிக்கைகளை கொண்டிருப்பீர்கள், அது தவறானது என்பதற்கான பல சான்றுகள் இருந்தாலும் உங்கள் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும். உதாரணமாக, நீங்கள் நினைப்பதை, சொல்வதை அல்லது செய்வதை யாரோ ஒருவர் கட்டுப்படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம்.
* இல்லாத ஒன்றை உணரக்கூடிய நபர் என நீங்கள் உங்களை நினைத்துக்கொள்ளலாம். மற்றவர்களிடம் உரையாடும் போது ஒழுங்கமைத்து பேசுவதில் சிக்கல்கள் இருக்கலாம், இதற்கு காரணம் உங்களுடைய எண்ணங்கள் தெளிவில்லாமல் போவதே.
* கூட்டத்தாருடன் இருக்கும் போது நீங்கள் மிக வித்தியாசமாக உணர்வீர்கள், உதாரணமாக அடிக்கடி திரும்பி பார்ப்பது அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவை
* எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருத்தல்.
* சந்தேகம், பதட்டமாக அல்லது பயமாக உணருதல்
* சுகாதாரம் மற்றும் தோற்றத்தை குறித்து கவலை கொள்ளாமல் இருத்தல்
எதனால் ஏற்படுகிறது?
schizophrenia ஏற்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். அவற்றில் முக்கியமானவை,
* உங்கள் மூளையின் செல்களுக்கு இடையேயான தொடர்புக்கு பயன்படுத்தும் வேதியியல் சமிக்ஞைகளில் ஏற்றத்தாழ்வு.
* பிறப்பதற்கு முன் மூளை வளர்ச்சி சிக்கல்கள்.
* உங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையிலான தொடர்புகளை இழத்தல் போன்றவை.
பரம்பரை அல்லது மரபு ரீதியாக உங்களது பெற்றோர்/ உடன் பிறந்தவர்களுக்கு இருந்திருந்தால் உங்களுக்கான ஆபத்துக்கள் மிக மிக அதிகம்.
மேற்குறிப்பட்ட அறிகுறிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்தாலோ மருத்துவரை அணுகுவது சிறந்தது.
சிகிச்சைகள்
schizophrenia என்பதை உறுதி செய்யாக CT, MRI ஸ்கேன்கள் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.
ரத்த மாதிரிகள், சிறுநீரக மாதிரிகள் மற்றும் EEG சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.
schizophrenia குணப்படுத்த முடியாது என்ற போதிலும் சிகிச்சையளிக்கக்கூடியது, ஒரு சிலரே schizophreniaலிருந்து குணமடைந்துள்ளனர்.
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள், தொடர்ச்சியான ஆலோசனைகள் மற்றும் சுய மேலாண்மையுடன் கூடிய தெரபிக்கள் இந்நோய்க்கான சிகிச்சையாகும்.