"ஹீரோயின் படத்தை யார் பார்ப்பாங்க?" அசிங்கப்படுத்திய தியேட்டர்காரர்- 100 கோடி வசூலால் பதிலளித்த சமந்தா!
நடிகை சமந்தா நடித்து, தயாரிப்பாளராகவும் உருவாக்கிய "மா இன்டி பங்காரம்" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தமிழில் "எங்கள் தங்கம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
குடும்பக் கதைக்களத்துடன் உருவான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து சிறப்பான வசூலை குவித்து வருகிறது.

100 கோடி வசூல்
இந்த நிலையில், படம் தற்போது உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் என்ற முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான சாதனையை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிறப்பு போஸ்டருடன் பகிர்ந்து ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார்.
அவரது பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெளியீட்டுக்கு முன் அவமானப்படுத்தியவருக்கு சமந்தாவின் பதிலடி
இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு முன்பு, பி சென்டர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்க உரிமையாளரின் கருத்தை தெரிந்துகொள்ள சமந்தா தனது தோழி ஒருவரை வைத்து தொலைபேசியில் பேச வைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது, "இந்த படத்திற்கு ஓப்பனிங் எப்படி இருக்கும்?" என்று கேட்டதற்கு, அந்த திரையரங்க உரிமையாளர், "ஹீரோயின் படம் பார்க்க யார் வருவார்கள்? பெரிய ஹீரோ நடித்திருந்தால் மட்டும் ஓப்பனிங் இருக்கும். சமந்தாவை மக்கள் கவர்ச்சிக்காகத்தான் அறிவார்கள்; அவர் மட்டும் நடித்த படத்தை பார்க்க ரசிகர்கள் வரமாட்டார்கள்" என்று விமர்சனமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உரையாடலை சமந்தாவும் நேரடியாக கேட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு அப்போது எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்த அவர், தற்போது படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த பிறகு தனது வெற்றியின் மூலம் பதிலளித்துள்ளார்.
சமந்தா பதிலடி
100 கோடி வசூல் சாதனையை அறிவித்த பதிவில், "இனிமேல் பி மற்றும் சி சென்டர்களில் ஹீரோயின் படங்கள் குறித்து யாராவது கேட்டால் உடனே 'No' என்று சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக 'Let's see' என்று சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டு, தன்னை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

சமந்தாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் என்பதற்கு இந்த சாதனை சிறந்த எடுத்துக்காட்டாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |