சண்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைலில் அசத்தல் மெஜஸ்டிக் சிக்கன் ரெசிபி!
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பல வீடுகளில் அசைவ விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, சிக்கன் இல்லாமல் சண்டே மதிய உணவு முழுமையடையாது என்பதே பலரின் எண்ணம்.
இன்றுவீட்டிலும் சிக்கன் வாங்கி சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா? அதே பழக்கமான சிக்கன் குழம்பு, வறுவல் அல்லது 65 போன்ற உணவுகளைச் செய்வதற்குப் பதிலாக, குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தும் வகையில் வித்தியாசமான மற்றும் சுவைமிக்க ஒரு சிக்கன் சைடு டிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால், ஆந்திராவின் பிரபலமான மெஜஸ்டிக் சிக்கன் (Chicken Majestic) ரெசிபியை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.
சாதம், பிரியாணி, ஃபிரைடு ரைஸ், நான், ரொட்டி போன்ற பல உணவுகளுக்கும் சிறந்த சைடு டிஷ்ஷாக இது அமையும். ஒருமுறை செய்து பார்த்தால், உங்கள் வீட்டிலும் அடிக்கடி செய்ய விரும்பும் சிறப்பு சிக்கன் ரெசிபிகளில் இதுவும் ஒன்றாக மாறிவிடும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் – ½ கிலோ
மோர் – ½ கப்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – ½ ஸ்பூன்
முட்டை – 1 (நன்றாக அடித்தது)
சோளமாவு – 3 ஸ்பூன்
பூண்டு – 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் கீறியது)
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ½ ஸ்பூன்
கெட்டியான தயிர் – 2 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
புதினா இலை – 2 ஸ்பூன் (நறுக்கியது)
கொத்தமல்லி இலை – 1 ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை
முதலில், எலும்பில்லாத சிக்கனை மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மோர் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து குறைந்தது 2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊறவைக்கவும். அதிக சுவை வேண்டுமெனில், இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் பயன்படுத்தலாம்.
பின்னர் சிக்கனிலிருந்து மோரைக் முழுமையாக வடித்து, வேறொரு பாத்திரத்தில் மாற்றவும். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், அடித்த முட்டை மற்றும் சோளமாவு சேர்த்து, அனைத்து துண்டுகளிலும் நன்றாகப் படுமாறு கலக்கவும்.

ஒரு ஆழமான வாணலியில் எண்ணெயை நன்றாகக் காயவைத்து, தீயை மிதமான அளவிற்கு குறைக்கவும். சிக்கன் துண்டுகளைச் சிறிது சிறிதாகப் போட்டு, எல்லாப் பக்கங்களும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். பொரித்த சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது மற்றொரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து சுமார் 30 விநாடிகள் வதக்கவும்.
அதன்பின் கீறிய பச்சை மிளகாய், வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து மேலும் 30 விநாடிகள் வதக்கவும். தீயை மிதமாக வைத்து காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலாத்தூளைச் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை சுமார் 30 விநாடிகள் கிளறவும்.
அதன்பிறகு கெட்டியான தயிரைச் சேர்த்து மசாலாவுடன் நன்றாகக் கலக்கி, 2 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். பின்னர் சோயா சாஸை சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கவும்.
இப்போது தீயை சற்று அதிகரித்து, பொரித்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து 3–4 நிமிடங்கள் மசாலாவுடன் நன்றாகப் பிரட்டி வதக்கவும்.
இறுதியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைத் தூவி, மேலும் ஒரு நிமிடம் கிளறிவிட்டு இறக்கினால். சுவையான, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் மெஜஸ்டிக் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |