வேலைக்கு சென்று வீடு திரும்பிய வாய்பேச முடியாத தாய்... மகனின் நிலை கண்டு கதறிய கொடுமை
பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியால் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ரவி(16. இவர் ஓசூர் அரசு தொழிற்கல்லுாரியில் முதல் ஆண்டு படித்து வந்துள்ளார். தந்தையை இழந்த ரவி, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான தாய் ஜெயலட்சுமியுடன் வசித்து வந்தார். ஆன்லைன் வகுப்பிற்கு வைத்திருந்த போனில் அதிக நேரம் பப்ஜி விளையாடியுள்ளார்.
இவரது தாய் பலமுறை கண்டித்தும் கேட்காமல் தனது விளையாட்டினைத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், சனிக்கிழமை கட்டிட வேலைக்கு சென்ற தாய் ஜெயலட்சுமி மாலை வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த ஜெயலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவைத் திறந்து பார்த்தபோது, ரவி தனது தாயின் புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
வாய் பேசமுடியாத தாய் ஜெயலட்சுமி செய்வதறியாமல் கதறி அழுதது பார்ப்போரின் இதயத்தை கலங்க வைத்தது. தகவலறிந்த பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தாலும் விபிஎன் வசதியைப் பயன்படுத்தி செல்போனில் லோகேஷனை மாற்றி விளையாட முடியும். இந்த அடிப்படையில்தான் ரவியும் பப்ஜி விளையாட்டை விளையாடியுள்ளார்.
விளையாட்டின் போது நண்பர்களிடையே ஏற்பட்ட போட்டியில் சவால்விட்டுள்ளனர். அதில் ஏற்பட்ட பிரச்னையில் திடீரென மனமுடைந்த ரவி, தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பப்ஜி விளையாட்டைத் தடை செய்தாலும், இதுபோல மாற்று வசதிகளைப் பயன்படுத்தி விளையாடுவதற்கும் நிரந்தரத் தடை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வாழ்ந்து காட்ட வேண்டிய வயதில், சிறிய பிரச்னைக்காக பப்ஜி விளையாட்டினால் மாணவன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.