Puberty Food Diet: பூப்பெய்திய சிறுமிகளுக்கான உணவுப்பட்டியல்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் உடல்ரீதியான பெரிய மாற்றம் என்றால் அது பூப்பெய்தும் நிகழ்வு தான்.
விளையாட்டுத்தனமாக சுற்றித்திரிந்த சிறுமி தன்னை ஒரு முதிர்ந்த பெண்ணாக உணர்வதற்கான தொடக்கப்புள்ளியும் இதுவே.
அன்றைய காலகட்டத்தில் சிறுமிகள் பூப்பெய்தியதும் பல சத்தான உணவுகளை சாப்பிடக் கொடுப்பார்கள்.
அதுவே அவளது வாழ்நாள் முழுமைக்கும் அடித்தளமாக அமைகிறது, உணவுகளில் கவனம் வேண்டும் என்பதற்காக அதிக கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
இதனால் உடல் எடை அதிகரித்து அதுவே சீரற்ற மாதவிடாய் உட்பட பல தொந்தரவுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.
இந்த பதிவில் சிறுமி பூப்பெய்தியதும் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
கருப்பு உளுந்து
தோல் நீக்கிய கருப்பு உளுந்தில் வடை, களி மற்றும் சத்துமாவு செய்து கொடுக்கலாம், கருப்பு உளுந்தை சுத்தம் செய்துவிட்டு நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும், இதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். இந்த மாவை கூழாக காய்ச்சி நல்லெண்ணெய், உலர் திராட்சை உட்பட இன்னும் பல நட்ஸ்கள் சேர்த்துக் கொடுக்கலாம்.
நல்லெண்ணெய்
ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் செயல்பாடுகளுக்கு நல்ல கொழுப்பு அவசியம், நல்லெண்ணெயில் இது அதிகம் இருப்பதால் சாதத்துடன் கலந்து சாப்பிடக் கொடுக்கலாம், நெய்யும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
நாட்டு முட்டை
தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டுக்கோழி முட்டையை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும், சமைக்காமல் சாப்பிட வேண்டாம், முட்டையை அவித்தோ, பொடிமாஸ் போன்றோ எடுக்கவும்.
பொட்டுக்கடலை
நெய், வெல்லம் சேர்த்த பொட்டுக்கடலை உருண்டையாக எடுக்கலாம், அப்படியே நாட்டு சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம், இது எலும்பை வலுப்படுத்தும், இதுதவிர கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை அவித்து மாலை நேரங்களில் சாப்பிடக் கொடுக்கலாம்.
சத்துமாவு உருண்டை
சிறுதானியங்கள் கொண்ட சத்துமாவு கடைகளில் கிடைக்கிறது, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சத்துமாவு உருண்டை கொடுத்து சாப்பிடச்சொல்லலாம். மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் சோர்வை போக்கும்.
இவை தவிர அசைவ உணவுகள், கீரை வகைகள், பழங்கள், எள், வேர்க்கடலை, சுண்டைக்காய், பாகற்காய், வெந்தயம் போன்றவற்றையும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.