வயிற்று வலியால் துடிதுடித்து வந்த பெண்... உள்ளே இருந்ததை கண்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள்
பெண் ஒருவரின் வயிற்றில் மருத்துவர்கள் பஞ்சு வைத்து சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த நீலவேணி (46), இவர், அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலவேணிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால், நீலவேணி பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு நீலவேணியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பப்பையில் கட்டி இருப்பதால் அதை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நீலவேணி, மருத்துவமனையில் கட்டி நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். செப்டம்பர் 7 தேதி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நீலவேணிக்கு ஒரிரு தினங்களில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. உடனே நீலவேணி மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
அப்போது, இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது அவர்கள் முறையாக பதில் எதும் சொல்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நீலவேணி உயிருக்கு பயந்து ஆந்திர மாநிலம் புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார்.
அங்கு நீலவேணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ இருப்பதாக தெரிவித்தனர். பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் நீலவேணிக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த போது வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கபட்டது தெரியவந்தது.
முன்னதாக கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையில், தெரியாமல் பஞ்சு வைத்து தைத்துள்ளதாக நீலவேணியிடம் மருத்துவர்கள் தெரிவித்ததுடன், பஞ்சு அகற்றிய வீடியோ பதிவையும் கொடுத்தனர்.
பாதிக்கப்பட்ட நீலவேணி தவறான சிகிச்சை செய்த மருத்துவமனை, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.