லண்டனில் போராட்டம் படத்தால் அதிர்ந்த அரங்கம் – ஈழத்திலும் நிறைந்து வழிந்த திரையரங்குகள்!
யாழ்ப்பாணத்தில் திரையரங்குகள் நிறைந்து வழிய, ‘போராட்டம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஈழ சினிமாவின் 64 ஆண்டுகளுக்குப் பின்னரான வளர்ச்சியை இந்தத் திரைப்படத்தில் காண முடியும் என ஐபிசி தமிழ் நிறுவனத்தின் உரிமையாளர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
‘போராட்டம்’ திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட போது ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, ஈழத் தமிழ் சினிமாவின் அடுத்தகட்டப் பயணம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, லண்டனில் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னர் அங்கிருந்த பார்வையாளர்களுடன் உரையாடிய பாஸ்கரன் கந்தையா, ஈழத்து சினிமா 64 ஆண்டுகளைக் கடந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாகவும், அந்த வளர்ச்சியின் ஒரு கட்டத்தை ‘போராட்டம்’ திரைப்படத்தில் காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஈழத்து சினிமாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் பலரும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், இந்தப் பயணத்தில் ஐபிசி தமிழ் ஊடகமும் 2017ஆம் ஆண்டு முதல் தனது பங்களிப்பை வழங்கி வருவதாகக் கூறினார்.
குறும்படங்களிலிருந்து பெரிய திரை திரைப்படங்கள் வரையிலான படைப்புகளை உருவாக்கி வெளியிடுவதற்கான முயற்சிகளையும் ஐபிசி தமிழ் நிறுவனம் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், ‘போராட்டம்’ திரைப்படம் அதிகளவான திரையரங்குகளில் வெளியாகியுள்ளமை, ஈழ சினிமாவின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு கட்டமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பி வழிந்ததும், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் திரைப்படம் திரையிடப்பட்டு வருவதும், ஈழத் திரைப்படங்களுக்கு உள்ளூர் மட்டுமன்றி சர்வதேசத் தளத்திலும் பெரும் வரவேற்ப்பு காணப்படுகின்றமையை பறைசாற்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |