இலங்கைக்கு சென்றால் மறக்காமல் இங்கு சென்று வாருங்கள்! பிரம்மிப்பில் ஆழ்த்தும் அழகு
பின்னவல சரணாலயம் யானைகள் எமக்கு ஒரு பெரிய வளமாகும்.
களைப்படைந்த மனதிற்கு யானைகளையே பார்த்துக் கொண்டு இருந்தாலே இதமாக அமையும்.
யானைகளின் பல்வேறு செயல்பாடுகளை பார்த்துக் கொண்டு இருப்பதும் ரசிப்பதும் மனதிற்கு அலாதியான சுகத்தை ஏற்படுத்தக் கூடியது.
அந்த வகையில் இலங்கையில் பின்னவல யானைகள் சரணாலயம் ஓர் முக்கியமான சுற்றுலா தலமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிக அதிக அளவில் கவரும் ஓர் இடமாக இந்த பின்னவல யானைகள் சரணாலயத்தை நாம் குறிப்பிட்டு கூற முடியும்.
கொழும்பு கண்டி பிரதான கேகாலை வீதியில் நகரை தாண்டி கரண்டுபன சந்தியில் திரும்பி ரம்புக்கன வீதியில் பயணிக்கும் போது பின்னவல யானைகள் சரணாலயத்தை சென்றடைய முடியும்.
1975 ஆம் ஆண்டு பின்னவல யானைகள் சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக இந்த யானைகள் சரணாலயம் சர்வதேச ரீதியாக பிரபல்யம் அடைந்துள்ளது.
காட்டில் நிர்க்கதியான 8 யானை குட்டிகளுடன் இந்த சரணாலயம் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது சுமார் 90 யானைகள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன.
உமாஓயா ஆற்றுக்கு அருகாமையில் அடைந்த 27 கிலோமீற்றர் பரப்பில் இந்த யானைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இந்த சரணாலயம் நாள்தோறும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
காலை 8:30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் இந்த வன விலங்கு சரணாலயத்தை பார்வையிட முடியும், இந்த சரணாலயத்தில் விசேட அம்சங்களில் ஒன்றாக யானைகள் நீராடுவதை குறிப்பிடலாம்.
காலை 10 முதல் நண்பகல் 12 வரை மணி வரையிலும் பிற்பகல் 2.00 முதல் 4.00 மணி வரையிலும் யானைகள் நீராடும் காட்சிகளை இந்த சரணாலயத்தில் பார்க்க முடியும்.
யானைகள் நீராடுவதற்காக அழைத்துச் செல்லப்படும் நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் அதனை அறிந்து கொள்வதற்காக சைரனொளி எழுப்பப்படுவது வழமையானதாகும்.
இந்த சரணாலயத்தில் உள்ள யானைக் குட்டிகளுக்கு நாளொன்றுக்கு ஐந்து தடவைகள் பாலூட்டப்படுகின்றது.
இதனையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் அனைத்து யானைகளுக்கும் பெயர் சூட்டப்பட்டு இருப்பது ஒரு விசேட அம்சமாகும்.
1996 ஆம் ஆண்டு உலகக் என்ன கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் இந்த சரணாலயத்தில் பிறந்த யானைக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுனவின் பெயர் சூட்டப்பட்டது.
வனவிலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பின்னவலயில் பிறந்த யானைகள், ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் பரிமாறி கொள்ளப்படும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.